உடற்பயிற்சி செய்யும் எந்திரத்தில் அமர்ந்து, எழும் இளைஞர்: படம் உதவி | ட்விட்டர். 
இந்தியா

டெல்லி ரயில் நிலையத்தில் இலவசமாக பிளாட்ஃபார்ம் டிக்கெட் பெற 'நூதன முறை': மக்களிடையே வரவேற்பு

ஐஏஎன்எஸ்

மத்திய அரசு ஃபிட் இந்தியா (உடல் தகுதி) திட்டத்தை மக்களிடையே பரப்பும் வகையில் நூதனப் பிரச்சாரத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.

டெல்லியில் உள்ள ஆனந்த் விஹார் ரயில் நிலையத்தில் நடைபாதை டிக்கெட் வேண்டுவோர், அங்கு அமைக்கப்பட்டுள்ள உட்கார்ந்து எழும் இயந்திரத்தில் 3 நிமிடங்களில் 30 முறை தோப்புக்கரணம் போடுவதுபோல் அமர்ந்து எழுந்தால் இலவசமாக டிக்கெட் பெறலாம்.

இதுகுறித்து மத்திய ரயில்வே அமைச்சர் பியூஷ் கோயல் ட்விட்டரில் கூறுகையில், " உடலை ஆரோக்கியமாக வைத்து, பணத்தையும் சேமியுங்கள். மக்களுக்கு உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் வகையில் ஆனந்த் விஹார் ரயில் நிலையத்தில் புதிய முறையைப் பரிசோதனை முயற்சியாகத் தொடங்கியுள்ளோம். புதிதாக வைக்கப்பட்டுள்ள இயந்திரத்தில் 3 நிமிடங்களில் 30 முறை உடற்பயிற்சி (அமர்ந்து எழுதல்) செய்தால் நடைபாதை டிக்கெட்டை இலவசமாகப் பெறலாம்" எனத் தெரிவித்துள்ளார்.

அதுமட்டுமல்லாமல் ஒரு பயணி உடற்பயிற்சி செய்யும் இயந்திரத்தில் அமர்ந்து, எழுந்து பயிற்சி செய்யும் வீடியோவையும் அமைச்சர் பியூஷ் கோயல் இணைத்துள்ளார்.

மத்திய விளையாட்டுத்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜூ ட்விட்டரில் கூறுகையில், " ரயில்வே அமைச்சர் பியூஷ் கோயல் புதிய முறையை அறிமுகப்படுத்தியுள்ளார். உடலையும் ஆரோக்கியமாக வைத்து பணத்தையும் சேமிக்கலாம். ஆனந்த் விஹார் ரயில் நிலையத்தில், உள்ள இயந்திரத்தில் 3 நிமிடங்கள் உடற்பயிற்சி செய்து இலவசமாக நடைபாதை டிக்கெட் பெறலாம். பிரதமர் மோடியால் ஃபிட் இந்தியா இயக்கம் அறிமுகம் செய்யப்பட்டது" எனத் தெரிவித்தார்.

SCROLL FOR NEXT