இந்தியா

ராமர் கோயில் திருப்பணிகள் அமைதியாக, மதஒற்றுமைக்கு பங்கம் இல்லாமல் நடைபெற வேண்டும்: அறக்கட்டளை உறுப்பினர்களுக்கு பிரதமர் மோடி அறிவுறுத்தல்

பிடிஐ

அயோத்தியில் ராமர் கோயில் கட்டும் கட்டுமானப் பணிகள் மதநல்லிணக்கத்துக்கு தீங்கு விளைவிக்காமல், எந்த ஒரு கசப்புணர்வும் இல்லாமல் நடைபெற வேண்டும் என்று தங்களை பிரதமர் நரேந்திர மொடி கேட்டுக் கொண்டதாக அறக்கட்டளையின் பொதுச் செயலாளர் சம்பத் ராய் வெள்ளிக்கிழமையன்று தெரிவித்தார்.

ஸ்ரீ ராமஜென்ம பூமி தீர்த்த ஷேத்ர தலைவர் நிருத்ய கோபால் தாஸ் மற்றும் 3 உறுப்பினர்கள் வியாழக்கிழமையன்று பிரதமர் நரேந்திர மோடியை அவரது இல்லத்தில் சந்தித்து பிரதமரை பூமி பூஜை மற்றும் கட்டுமானப் பணி தொடக்க விழாவுகு வர வேண்டும் என்று அழைப்பு விடுத்தனர்.

இதற்கான தேதி இன்னமும் குறிக்கப்படவில்லை.

இந்நிலையில் அறக்கட்டளை பொதுச் செயலர் சம்பத் ராய் கூறும்போது, “கோயில் கட்டுமானத் திருப்பணிகள் அமைதியான முறையிலும் மத ஒற்றுமைக்கு பங்கம் விளைவிக்காமலும் கசப்புணர்வு ஏற்படுத்தாமலும் நடைபெற வேண்டும் என்று பிரதமர் மோடிஜி அறிவுறுத்தினார்.

மேலும் நாட்டின் அமைதிச்சூழ்நிலை கெடுமாறு எந்த ஒரு காரியத்தையும் செய்யலாகாது என்றும் மோடிஜி அறிவுறுத்தினார்” என்று தெரிவித்தார்.

அயோத்தி வழக்கில் உச்ச நீதிமன்றத் தீர்ப்பின்படி, அயோத்தியில் ராமர் கோயில் கட்டுவதற்காக புதிய அறக்கட்டளையை 3 மாதங்களுக்குள் தொடங்கப்பட வேண்டும் என்று உத்தரவிட்டது. அந்த உத்தரவின் அடிப்படையில் ஸ்ரீ ராமஜென்மபூமி தீர்த்த ஷேத்ரா எனும் அறக்கட்டளையை உருவாக்க மத்திய அமைச்சரவை அனுமதி வழங்கியது.

இந்த அறக்கட்டளைக்கு ஒரு தலித் உறுப்பினர் உள்பட 15 அறங்காவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இதில் மூத்த வழக்கறிஞரும், முன்னாள் சொலிசிட்டருமான கே.பராசரன், ஜகத்குரு சங்கராச்சார்யா, ஜோதிஸ்பீதாதீஸ்வர் சுவாமி வாசுதேவானந்த் சரஸ்வதிஜி மகராஜ் (அலகாபாத்), ஜகத்குரு மாதவாச்சார்யா சுவாமி விஸ்வா பிரசன்னதீர்த் ஜி மகராஜ் , உடுப்பி பெஜாவர் மடம், ஹரித்வாரின் யுகபுருஷ் பரமானாந்த் ஜி மகராஜ், புனேவைச் சேர்ந்த சுவாமி கோவிந்த கிரி ஜி மகராஜ் , அயோத்தியைச் சேர்ந்த விமலேந்திர மோகன் பிரதாப் மிஸ்ரா, ஹோமியோபதி மருத்துவர் அனில் மிஸ்ரா, பாட்னாவைச் சேர்ந்த கமாஸ்ஸவர் சவுபால், நிரமோகி அஹாராவின் மகந்த் தினேந்திர தாஸ், அயோத்தி பைதக் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.

புதிதாக அமைக்கப்பட்ட அறக்கட்டளை அயோத்தியில் பக்தர்களைச் சந்தித்து ராமர் கோயில் கட்டுமானம் தொடர்பாகப் பேசத் தொடங்கியுள்ளது. நாளை (22-ம் தேதி) அயோத்தியில் உள்ள ஹனுமன் மண்டல் பெயரில் ஆலோசனைக் கூட்டமும் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது

அதன்பின் 2-வது ஆலோசனைக் கூட்டம் மார்ச் 3 அல்லது 4-ம் தேதி அயோத்தியில் நடைபெறுகிறது. இந்தக் கூட்டத்தில் அயோத்தியில் ராமர் கோயில் கட்டும் திட்டம் குறித்து முக்கிய முடிவு எடுக்கப்பட உள்ளது.

ராமர் கோயில் கட்டும் குழுவின் தலைவராக பிரதமர் மோடியின் முன்னாள் உதவியாளர் நிர்பேந்திர மிஸ்ரா பெயர் முன்மொழியப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில்தான் நேற்று தாஸ், ராய், கே.பராசரன், ஸ்வாமி கோவிந்த் கிரி மஹராஜ் ஆகியோர் பிரதமர் மோடியைச் சந்திக்கச் சென்ற போது மோடி இவ்வாறு கூறியதாக அறக்கட்டளை தெரிவித்துள்ளது.

SCROLL FOR NEXT