பாகிஸ்தான் ஆக்ரமிப்பு காஷ்மீர் பகுதியில் புகுந்து இந்திய ராணுவம் தாக்குதல் நடத்தியதாக கூறப்படும் துல்லிய தாக்குதல் பற்றி விவரங்களை வெளியிட முடியுமா என பிரதமர் மோடிக்கு மத்திய பிரதேச முதல்வர் கமல்நாத் சவால் விடுத்துள்ளார்.
இதுகுறித்து போபாலில் அவர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது:
கடந்த சில மாதங்களாக பிரதமர் மோடியின் உரையை கவனித்து பாருங்கள். இளைஞர்கள் பற்றி மோடி பேசி கேட்டிருக்கிறீர்களா? விவசாயிகள் பற்றி பேசி கேட்டிருக்கிறீர்களா? ஆண்டுக்கு 2 கோடி வேலைவாய்ப்புக்களை உருவாக்குவதாக பிரதமர் மோடி உறுதியளித்தார். ஆனால் அவர் 2 லட்சம் வேலைவாய்ப்பைக் கூட உருவாக்கவில்லை.
எப்போதுமே துல்லிய தாக்குதல் பற்றி தான் பெருமை பேசுகிறார். 1971-ம் ஆண்டு பாகிஸ்தான் போரின்போது, வெற்றிக்கு பிறகு 90,000 அந்நாட்டு நாட்டு வீரர்களை அப்போதைய பிரதமர் இந்திரா காந்தி அரசு சரணடைய வைத்தது. ஆனால் இதைபற்றி பிரதமர் மோடி பேச மாட்டார். ஆனால் அவர் துல்லிய தாக்குதல் பற்றி மட்டுமே பேசுவார். அவருக்கு துணிவு இருந்தால் அதுபற்றிய விபரங்களை தர முடியுமா.
இவ்வாறு அவர் கூறினார்.