கோப்புப் படம் 
இந்தியா

வர்த்தக குழுவுடன் வரும் ட்ரம்ப்: இந்தியாவுடன் ஒப்பந்தம் செய்ய ஆர்வமில்லையா? 

செய்திப்பிரிவு

அமெரிக்க அதிபர் ட்ரம்ப் மற்றும் மெலனியா ட்ரம்ப் ஆகிய இருவரும் அகமதாபாத்துக்கும் புதுடெல்லிக்கும் பிப்ரவரி 24 மற்றும் 25 ஆகிய தேதிகளில் வருகை தர உள்ளனர். அகமதாபாத்தில் உள்ள 1.1 லட்சம் இருக்கைகள் கொண்ட மோட்டேரா மைதானத்தில் நடைபெறும் ‘கெம் சோ ட்ரம்ப்’ என்ற பொதுக் கூட்டத்தில் உரையாற்றுகிறார். அவரது வருகைக்காக பெரிய அளவில் ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன.

இந்தநிலையில், பிரதமர் மோடியை நான் மிகவும் நேசிக்கிறேன். ஆனால் இந்தியாவின் வர்த்தக செயல்பாடுகள் கடும் அதிருப்தியை ஏற்படுத்துகிறது. எனவே இந்திய பயணத்தில் வர்த்தக ஒப்பந்தங்கள் பெரிய அளவில் செய்வதற்கு விருப்பமில்லை என அமெரிக்க அதிபர் ட்ரம்ப் கூறியுள்ளார்.

அமெரிக்க அதிபர் ட்ரம்ப் வருகை தரவுள்ள நிலையில் இந்தியாவுடனான வர்த்தக ஒப்பந்தங்கள் தொடர்பாக அவர் அதிருப்தி தெரிவித்து வருகிறார். மோடி மீதான நேசம் காரணமாகவே இந்தியா வருவதாகவும், வர்த்தக ஒப்பந்தத்தில் பெரிய அளவில் ஆர்வம் இல்லை எனவும் அவர் கூறி வருகிறார்.

ஆனால் அமெரிக்க அதிபர் ட்ரம்பின் இந்திய வருகையின்போது இருதரப்பிலும் வர்த்தகமே முக்கிய எதிர்பார்ப்பாக இருக்கும் எனத் தெரிகிறது. அமெரிக்க பொருட்களுக்கான இறக்குமதி வரியை இந்தியா கணிசமாக குறைக்க வேண்டும் என்பதே ட்ரம்பின் எதிர்பார்ப்பு, அதற்காகவே அவர் வர்த்தகம் ஒப்பந்தங்கள் தொடர்பாக தனது அதிருப்தியை தெரிவித்து வருவதாக கூறப்படுகிறது.

இதன் காரணமாகவே ட்ரம்ப் தன்னுடன் பெரிய அளவில் வர்த்தகம் சார்ந்த குழுவினரை அழைத்து வருகிறார்.

அமெரிக்க அதிபர் ட்ரம்புடன் மூத்த ஆலோசகர் ஜாரேடு குஷ்னர், அமெரிக்க வர்த்தக பிரதிநிதி ராபர்ட் லிக்திசர், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஓ பிரைன், நிதித்துறை செயலர் ஸ்டீவ் முனிச், வர்த்தகத்துறை செயலர் வில்பர் ரோஸ், பட்ஜெட் மற்றும் நிர்வாக அலுவலக இயக்குநர் மிக் முல்வானே ஆகியோரும் இந்தியா வருகை தருகின்றனர். இதன் மூலம் இந்தியாவுடன் வர்த்தக ஒப்பந்த விவகாரங்களில் ட்ரம்ப் மிகுந்த ஆர்வம் காட்டுவதாக தெரிகிறது.

SCROLL FOR NEXT