குற்றவாளிகளின் வழக்கறிஞர்கள் நீதியைத் தாமதப்படுத்துவதாக நிர்பயாவின் தாயார் ஆஷா தேவி குற்றஞ்சாட்டியுள்ளார்.
கடந்த 2012-ம் ஆண்டில் டெல்லியில் மருத்துவ மாணவி நிர்பயா பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் குற்றவாளிகள் முகேஷ், வினய் குமார் சர்மா, அக்சய் சிங், பவன் குமார் குப்தா ஆகியோருக்கு தூக்கு தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
மார்ச் 3-ம் தேதி காலை 6 மணிக்குள் குற்றவாளிகள் 4 பேருக்கும் தூக்கு தண்டனை நிறைவேற்ற டெத் வாரண்ட் பிறப்பித்து டெல்லி விசாரணை நீதிமன்றம் உத்தரவிட்டது.
இந்நிலையில் குற்றவாளிகளில் ஒருவரான வினய் குமார் சர்மா கடந்த ஞாயிற்றுக்கிழமை சிறையில் தனக்குத் தானே சிறையின் சுவரில் தலையை மோதி, காயம் ஏற்படுத்திக் கொண்டதாக சிறை நிர்வாகம் தரப்பில் கூறப்படுகிறது.
குற்றவாளி வினய் குமார்
இந்நிலையில் குற்றவாளி வினய் குமார் தரப்பில் அவரின் வழக்கறிஞர் மனு ஒன்றை டெல்லி நீதிமன்றத்தில் தாக்கல் செய்தார். அதில், "வினய் குமாருக்கு தலையில் காயம் ஏற்பட்டுள்ளது. அதுமட்டுமல்லாமல், அவர் மனநிலை பாதிக்கப்பட்டவர் போல் இருக்கிறார்.
அவருக்குத் தூக்கம் குறைந்துவிட்டதால், மூத்த உளவியல் நிபுணரிடம் கொண்டு சென்று சிகிச்சை அளிக்க உத்தரவிடவேண்டும்" என வாதிட்டார்.
இந்நிலையில், நிர்பயாவின் தாயார் ஆஷா தேவி ஏஎன்ஐ செய்தி நிறுவனத்துக்கு அளித்த பேட்டியில், "வினய் குமார் நன்றாகவே இருக்கிறார்.
அவரின் வழக்கறிஞர் ஏ.பி.ஷா தான் பித்து பிடித்ததுபோல் நடக்கிறார். உண்மையில் அவருக்குத் தான் ஓய்வு தேவைப்படுகிறது. அவர் ஏதாவது வழக்கு தொடர்ந்து நீதிமன்றத்தைத் தவறாக திசை திருப்ப முயற்சிக்கிறார். அவருக்கு ஏற்கெனவே உயர் நீதிமன்றமும், உச்ச நீதிமன்றமும் கண்டனம் தெரிவித்துவிட்டது" என்றார்.
தூக்கு தண்டனைக் குற்றவாளி நல்ல மனநிலை, உடல்நிலையில் இருந்தால்தான் தூக்கு தண்டனை நிறைவேற்ற முடியும். மனநிலை பாதிக்கப்பட்ட நிலையில் இருந்தால் நிறைவேற்ற முடியாது.
இந்த சட்ட நுணுக்கத்தை வைத்து வினய் குமாரின் தண்டனையைத் தள்ளிவைக்க முயற்சிகள் நடைபெறுவதாக பல தரப்பிலும் குற்றச்சாட்டு முன்வைக்கப்படுகிறது.