கோப்புப்படம் 
இந்தியா

கரோனா வைரஸ் அச்சம்: சீனாவுக்கு விமான சேவை ஜூன் 30 வரை நிறுத்தம்; ஏர் இந்தியா அறிவிப்பு

பிடிஐ

கரோனா வைரஸ் தொற்று காரணமாக, சீனாவுக்கு வரும் ஜூன் 30-ம் தேதி வரை விமான சேவை நிறுத்தப்படுவதாக ஏர் இந்தியா நிறுவனம் அறிவித்துள்ளது.

சீனாவின் ஹூபே மாகாணம், வூஹான் நகரை மையமாக வைத்து, கரோனா வைரஸ் பரவத் தொடங்கியது. இதுவரை அந்த வைரஸுக்கு 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் பலியாகியுள்ளனர். 70ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். 25 நாடுகளுக்கும் மேலாக கரோனா வைரஸ் பரவியுள்ளது.

சீனாவில் வூஹான் நகரி்ல சிக்கி இருந்த 500க்கும் மேற்பட்ட இந்தியர்களை ஏர் இந்தியா விமானம் மூலம் கடந்த மாத இறுதியில் மத்திய அரசு மீட்டு வந்தது. கரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்ததைத் தொடர்ந்து சீனாவுக்கு விமான சேவையை ஏர் இந்தியா நிறுவனம் 6 வாரங்களுக்கு நிறுத்துவதாக அறிவித்திருந்தது.

இந்த அறிவிப்பு கடந்த 14-ம் தேதியோடு முடிந்த நிலையில், இம்மாதம் 15-ம் தேதிக்குப் பின்பும் ஏர் இந்தியா நிறுவனம் சீனாவுக்கு இயக்கப்படாமல் இருந்து வந்தது. இதனால் பயணிகள் சீனாவுக்குச் செல்லவும், அங்கிருந்து இந்தியர்கள் உள்ளிட்ட வெளிநாட்டவர்கள் இந்தியாவுக்குள் வரவும் டிக்கெட் முன்பதிவுக்காகக் காத்திருந்தார்கள்.

இந்நிலையில் கரோனா வைரஸ் தாக்கம் இன்னும் சீனாவில் குறையவில்லை என்பதால், ஜூன் 30-ம் தேதி வரை விமான சேவையை அந்நாட்டுக்கு இயக்க முடியாது என ஏர் இந்தியா நிறுவனம் அறிவித்துள்ளது.

மேலும், டெல்லி-ஹாங்காங், டெல்லி-ஷாங்காய் ஆகிய இரு வழித்தடத்துக்கும் வரும் ஜூன் மாதம் 30-ம் தேதி வரை விமானம் இயக்கப்படாது என்று ஏர் இந்தியா நிறுவனம் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. ஏற்கெனவே இன்டிகோ, ஸ்பைஸ் ஜெட் விமான நிறுவனங்களும் தங்களின் விமான சேவையை ஏற்கெனவே நிறுத்திவிட்டன என்பது குறிப்பிடத்தக்கது.

SCROLL FOR NEXT