சமையல் சிலிண்டர் விலை தொடர்ந்து ஏறுமுகத்தில் இருந்துவரும் நிலையில் சிலிண்டர் விலை எப்போது குறையும் என்ற கேள்விக்கு மத்திய பெட்ரோலியத்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதில் அளித்துள்ளார்.
வீட்டு உபயோகத்திற்குப் பயன்படுத்தப்படும் 14.2 கிலோ மானியமில்லாத சிலிண்டரின் விலை கடந்த 5 மாதங்களாகத் தொடர்ந்து உயர்த்தப்பட்டு வருகிறது. டெல்லி தேர்தல் முடிவுகள் வெளியானபின் சிலிண்டர் ஒன்றுக்கு ரூ.144 உயர்த்தப்பட்டது,
கடந்த ஜனவரி மாதத்தில் ரூ.19 சிலிண்டர் ஒன்றுக்கு உயர்த்தப்பட்டது. மானியத்தொகை மக்கள் வங்கிக்கணக்கில் கிடைத்தாலும், கூடுதல் சிலிண்டரை வெளிச்சந்தையில் வாங்க முயலும் மக்களுக்கு கடும் சிரமத்தை ஏற்படுத்தி வந்தது. கடந்த 6 ஆண்டுகளுக்குப்பின், இம்மாத தொடக்கத்தில்தான் மிக அதிகமான அளவு சிலிண்டர் விலை உயர்த்தப்பட்டது.
இதனால், ஏழை மக்கள், நடுத்தர குடும்பத்துக்கு மக்கள் பெரிய சிரமத்துக்கு ஆளாகினர்.
இந்நிலையில், சத்தீஸ்தர் மாநிலம் ராய்பூருக்கு 2 நாட்கள் பயணமாக மத்திய பெட்ரோலியத்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் இன்று வந்தார். ராய்பூரில் உள்ள விமானநிலையத்தில் அவர் நிருபர்களுக்குப் பேட்டி அளித்தார்.
அப்போது அவரிடம் எப்போது சமையல் சிலிண்டர் விலை குறையும், தொடர்ந்து விலை அதிகரித்துக்கொண்டே வருகிறதே என்று நிருபர்கள் கேட்டனர். அதற்கு அவர் பதில் அளிக்கையில், " தொடர்ந்து சிலிண்டர் விலை அதிகரித்துக்கொண்டே வருவது என்பது உண்மையில்லை. இந்த மாதத்தில் சர்வதேசச் சந்தையில் பெட்ரோலிய கச்சா எண்ணெய் விலை அதிகரித்தது,
அதன் காரணமாக சிலிண்டர் விலை உயர்ந்தது. ஆனால், தற்போது கச்சா எண்ணெய் விலை குறைந்திருப்பதால், அடுத்த மாதம் அதாவது மார்ச் மாதம் சிலிண்டர் விலை குறையும் என்று எதிர்பார்க்கிறோம். பனிக்காலத்தில் சமையல் சிலிண்டர் பயன்பாடு அதிகரிக்கும், அதனால் பெட்ரோலியத்துறைக்கு சிறிது அழுத்தம் இருந்து. ஆனால் அடுத்த மாதத்தில் விலை குறைந்துவிடும் " எனத் தெரிவித்தார்