லக்னோவில் குடியுரிமைச் சட்டத்துக்கு எதிராக நடந்த போராட்டத்தின் போது பொதுச் சொத்துக்களை சேதப்படுத்தியதற்காக 64 லட்சம் ரூபாய் இழப்பீட்டுத் தொகையை செலுத்தக்கோரி 28 பேருக்கும் உத்தர பிரதேச மாநில அரசு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
மத்திய அரசு குடியுரிமைச் சட்டத்தில் திருத்தம் கொண்டுவந்து சட்டமாக்கியுள்ளது. இந்த சட்டத்தில் பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், வங்கதேசம் நாடுகளில் இருந்து ஆவணங்கள் இன்றி அகதிகளாக வரும் இந்துக்கள், கிறிஸ்தவர்கள், சீக்கியர்கள், பார்சிகள், ஜெயின் மதத்தினர், பவுத்த மதத்தினர் ஆகியோருக்கு இந்தியக் குடியுரிமை வழங்க, குடியுரிமை திருத்தம் கொண்டு வரப்பட்டுள்ளது.
இந்த சட்டத்துக்கு வடகிழக்கு மாநிலங்களில், மேற்கு வங்கம், டெல்லி, பிஹார் உள்ளிட்ட மாநிலங்களில் கடும் எதிர்ப்புக் கிளம்பியுள்ளது. நாட்டின் பல பகுதிகளில் போராட்டங்கள் நடந்து வருகின்றன. உத்தர பிரதேச மாநிலங்களிலும் பெரிய அளவில் போராட்டங்கள் நடந்து வருகினறன.
லக்னோ, அலிகார் உள்ளிட்ட இடங்களில் நடந்த போராட்டங்களில் பொது சொத்துகள் சேதப்படுத்தப்பட்டன. வன்முறையில் ஈடுபட்டவர்கள் அதற்கான இழப்பீட்டுத் தொகையை செலுத்த வேண்டும் என உ.பி. முதல்வர் யோகி அறிவித்தார். அதன்படி சேதப்படுத்தப்பட்ட சொத்துக்களுக்கு இழப்பீடு கோரி நோட்டீஸ் வழங்கப்பட்டு வருகிறது.
லக்னோவில் கடந்த டிசம்பர் 19-ம் தேதி நடந்த போராட்டத்தில் பெரிய அளவில் வன்முறைச் சம்பவங்கள் நடந்தன. வாகனங்கள் தீ வைத்துக் கொளுத்தப்பட்டன. பேருந்துகள் கல்வீசி தாக்கப்பட்டன. இந்த வன்முறை சம்பவங்கள் தொடர்பாக 46 பேர் மீது உ.பி. போலீஸார் வழக்குப்பதிவு செய்தனர். அவர்களுக்கு இழப்பீடு தொகையை செலுத்தக்கோரி நோட்டிஸும் அனுப்பட்டது.
ஆனால் அவர்களில் 18 பேர் தாங்கள் எந்த குற்றச்செயல்களிலும் ஈடுபடவில்லை என்பதை உறுதி செய்வதற்கான ஆதாரங்களை வழங்கினர். இதையடுத்து மீதமுள்ள 28 பேருக்கும் இழப்பீடு அனுப்பட்டுள்ளது. பொதுச் சொத்துக்களை சேதப்படுத்தியதற்காக 64 லட்சம் ரூபாய் இழப்பீட்டுத் தொகையை செலுத்தக்கோரி 28 பேருக்கும் உத்தர பிரதேச மாநில வசூல் ஆணையம் சார்பில் நோட்டீஸ் அனுப்பட்டுள்ளது.