பிரதிநிதித்துவப்படம் 
இந்தியா

ஏஜிஆர் நிலுவைக் கட்டணம்: வோடஃபோன் - ஐடியா நிறுவனம் கூடுதலாக ரூ.1,000 கோடி செலுத்தியது

பிடிஐ

ஏஜிஆர் நிலுவைக் கட்டணத்தில் ஏற்கெனவே ரூ.2,500 கோடியைச் செலுத்திய வோடஃபோன்- ஐடியா நிறுவனம் இன்று கூடுதலாக ரூ.1,000 கோடியைச் செலுத்தியதாக தொலைத் தொடர்புத்துறையின் மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்தார்

ஏஜிஎர் நிலுவைத் தொகையில் வோடஃபோன் நிறுவனம் மொத்தம் ரூ.53 ஆயிரம் கோடி செலுத்த வேண்டிய நிலையில், தற்போது வரை ரூ.3,500 கோடி மட்டும் செலுத்தியுள்ளது.

தொலைத்தொடர்பு நிறுவனங்களின் அலைக்கற்றை பயன்பாடு, உரிமம் தொடர்பாக அதன் வருவாய் அடிப்படையில் அரசுக்குக் குறிப்பிட்ட தொகையைச் செலுத்த வேண்டும். அந்த வகையில் பார்தி ஏர்டெல், வோடஃபோன் - ஐடியா உள்ளிட்ட தொலைத்தொடர்பு நிறுவனங்கள் ரூ.1.47 லட்சம் கோடி அரசுக்குச் செலுத்த வேண்டும். அத்தொகையை ஜனவரி 23-க்குள் செலுத்த வேண்டும் என்று கடந்த அக்டோபர் மாதம் 24-ம் தேதி உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.

அதைத் தொடர்ந்து வோடஃபோன் -ஐடியா, ஏர்டெல், டாடா டெலிசர்வீஸ் ஆகிய நிறுவனங்கள் உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை மறு ஆய்வு செய்ய வேண்டும் என்று தனித்தனியே மனுத்தாக்கல் செய்தன. அம்மனுக்களையும் உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. ஜனவரி 23 அன்று நிலுவைத் தொகையைச் செலுத்த முடியாத நிலையில் அந்நிறுவனங்கள் தொலைத்தொடர்புத் துறையிடம் கால அவகாசம் கேட்டன.

இந்த வழக்கு கடந்த வாரம் விசாரணைக்கு வந்தபோது உச்ச நீதிமன்ற நீதிபதி அருண் மிஸ்ரா தலைமையிலான அமர்வு தொலைத்தொடர்பு நிறுவனங்களைக் கடுமையாகக் கடிந்துகொண்டது. இவ்வழக்கு மார்ச் 17-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.

இதையடுத்து, நிலுவையைத் தொகையை உடனடியாகச் செலுத்துமாறு தொலைத்தொடர்பு நிறுவனங்களுக்கு மத்திய தொலைத்தொடர்புத் துறை சுற்றறிக்கை அனுப்பியது. இதை ஏற்று பார்தி ஏர்டெல் நிறுவனம் தனக்கு இருக்கும் நிலுவைக் கட்டணத்தில் ரூ.10 ஆயிரம் கோடியைச் செலுத்தியது.

இந்நிலையில், ஏஜிஆர் நிலுவைக் கட்டணமாக ரூ.2500 கோடி செலுத்துகிறோம். வெள்ளிக்கிழமை ரூ.1000 கோடி செலுத்துகிறோம். நிறுவனம் மீது நடவடிக்கை ஏதும் எடுக்க வேண்டாம் என்று வோடோஃபோன் நிறுவனம் உச்ச நீதிமன்றத்தில் கடந்த 17-ம் தேதி கோரிக்கை விடுத்தது. இதனை நீதிமன்றம் நிராகரித்தது.

இந்த சூழலில் 17-ம் தேதி ரூ.2500 கோடி செலுத்தியதாக அறிவித்த வோடஃபோன்- ஐடியா நிறுவனம், இன்று கூடுதலாக ரூ.1,000 கோடியைச் செலுத்தியுள்ளதாகத் தொலைத்தொடர்புத் துறையின் மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்தார்

கடந்த 17-ம் தேதி நிலவரப்படி, சரிக்கட்டப்பட்ட மொத்த வருவாய் நிலுவைத் தொகையில் ரூ.14, 697 கோடியைத் தொலைத் தொடர்பு சேவை நிறுவனங்களான பார்தி ஏர்டெல், வோடஃபோன் - ஐடியா மற்றும் டாடா குழுமம் ஆகியவை தொலைத் தொடர்பு துறைக்குச் செலுத்தியுள்ளன.

பார்தி ஏர்டெல் நிறுவனம் ரூ.10,000 கோடி, வோடஃபோன் ரூ.2500 கோடி, டாடா குழுமம் 2,197 கோடியை அரசுக்குச் செலுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது

SCROLL FOR NEXT