இந்தியா

அவிநாசி பேருந்து விபத்து: பிரதமர் மோடி இரங்கல் செய்தி

செய்திப்பிரிவு

அவிநாசியில் நடந்த பேருந்து விபத்தில் பலியானவர்களுக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.

திருப்பூர் மாவட்டம் அவிநாசி அருகே, இன்று (பிப்.20) அதிகாலை 3.30 மணியளவில் சேலத்திலிருந்து கேரள மாநிலம் ஆலப்புழா நோக்கிச் சென்று கொண்டிருந்த கேரள அரசு சொகுசுப் பேருந்தும் கேரளாவிலிருந்து சேலம் நோக்கி வந்துகொண்டிருந்த கண்டெய்னர் லாரியும் எதிர்பாராத விதமாக நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது.

இந்தக் கோர விபத்தில் சிக்கிய பயணிகளின் அலறல் சத்தம் கேட்டு, அக்கம்பக்கத்தில் இருந்தவர்கள், அந்த வழியாகச் சாலையில் சென்ற மற்ற வாகன ஓட்டிகள் உள்ளிட்டோர் விபத்தில் சிக்கியவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டனர்.

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்புத் துறையினர் போராடி பேருந்து விபத்தில் சிக்கியவர்களையும் உயிரிழந்தவர்களின் உடல்களையும் மீட்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டனர்.

இந்த விபத்தில், பேருந்தில் பயணம் செய்த 48 பேரில் 7 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். படுகாயமடைந்தவர்களை திருப்பூர் அரசு மருத்துவமனையிலும் கோவை தனியார் மருத்துவமனையிலும் சிகிச்சைக்காகச் சேர்த்துள்ளனர். மருத்துவமனைக்குக் கொண்டு செல்லும் வழியிலும், மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றியும் 12 பேர் உயிரிழந்தனர். இதனால், இந்தக் கோர விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 19 ஆக உயர்ந்துள்ளது.

இதுகுறித்து பிரதமர் மோடியின் அலுவலக ட்விட்டர் பக்க பதிவில் கூறியுள்ளதாவது:

‘‘தமிழகத்தின் திருப்பூர் மாவட்டத்தில் நிகழ்ந்த பேருந்து விபத்து குறித்த தகவலையறிந்து மிகுந்த துயரமடைந்தேன். விபத்தில் பலியானவர்களின் குடும்பத்தினருக்கு என ஆழ்ந்த இரங்கலையும் அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன். காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய வேண்டும் என பிராத்திக்கிறேன். ’’ எனக் கூறியுள்ளார்.

SCROLL FOR NEXT