இந்தியா

ராமஜென்மபூமி அறக்கட்டளை முதல் கூட்டம்: தலைவராக  நிருத்ய கோபால் தாஸ் தேர்வு; பொதுச் செயலாளராக விஎச்பி தலைவர் சம்பத் ராய் நியமனம்

செய்திப்பிரிவு

மத்திய அரசு அமைத்துள்ள ராமஜென்மபூமி தீர்த்த ஷேத்ரா அறக்கட்டளையின் முதல் கூட்டம் நடந்ததது.

நூற்றாண்டு காலம் நடந்து வந்த அயோத்தி வழக்கில் சர்ச்சைக்குரிய இடத்தில் ராமர் கோயில் கட்டலாம் என்று கடந்த ஆண்டு நவம்பர் 9-ம் தேதி உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

அந்தத் தீர்ப்பில் அயோத்தியில் சர்ச்சைக்குரிய 2.77 ஏக்கர் நிலத்தில் ராமர் கோயில் கட்ட அனுமதித்த உச்ச நீதிமன்றம், கோயில் கட்டுவதற்கு அறக்கட்டளையை மத்திய அரசு 3 மாதங்களுக்குள் உருவாக்க வேண்டும் என்று தீர்ப்பில் குறிப்பிட்டது. அதுமட்டுமல்லாமல் அந்த அறக்கட்டளை வசம் 2.77 ஏக்கர் நிலம் ஒப்படைக்கப்பட வேண்டும். அந்தக் கோயிலின் கட்டுமானப் பணிகளை அந்த அறக்கட்டளை கண்காணிக்க வேண்டும். அதற்குரிய உறுப்பினர்களை 3 மாதங்களில் நியமிக்க வேண்டும் என்று தீர்ப்பில் குறிப்பிட்டது.

அதன்படி, அயோத்தியில் ராமர் கோயில் கட்டுவதற்காக ஸ்ரீ ராமஜென்மபூமி திரத் ஷேத்ரா எனும் அறக்கட்டளை உருவாக்க மத்திய அமைச்சரவை அனுமதியளித்துள்ளது என பிரதமர் மோடி கடந்த 5-ம் தேதி மக்களவையில் அறிவித்தார்.

இந்த அறக்கட்டளையில் மொத்தம் பட்டியலினத்தைச் சேர்ந்த ஒருவர் உள்ளிட்ட மொத்தம் 15 பேர் உறுப்பினர்களாக நியமிக்கப்படுவார்கள் என மத்திய அரசு அறிவித்தது. அதன்படி, 7 முழு நேர உறுப்பினர்கள், 5 பேர் நியமன உறுப்பினர்கள், 3 பேர் அறக்கட்டளைதாரர்களாகவும் இருப்பார்கள் என அறிவிக்கப்பட்டது.

இதன்படி அமைக்கப்பட்ட அறக்கட்டளையின் முதல் கூட்டம் நேற்று மூத்த வழக்கறிஞர் கே.பராசரன் இல்லத்தில் உள்ள அதன் அலுவலகத்தில் நடைபெற்றது. கூட்டத்தில் அதில், அறக்கட்டளைக்கு புதிய நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

அதன்படி, மகந்த் நிருத்ய கோபால் தாஸ் தலைவராகவும், சம்பத் ராய் பொதுச் செயலராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டனர். பிரதமர் மோடியின் முன்னாள் முதன்மை செயலர் நிருபேந்திர மிஸ்ரா, கோயில் கட்டுமானக் குழுவின் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

கோவில் கட்டுமானத்துக்கான நன்கொடைகள் பெறுவதற்காக, அயோத்தியில் உள்ள பாரத ஸ்டேட் வங்கிக் கிளையில் தனியாக கணக்கு துவக்க கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. அறக்கட்டளையின் பொருளாளராக, புனேயைச் சேர்ந்த சுவாமி கோவிந்த் தேவ் கிரி தேர்ந்தெடுக்கப்பட்டார்.

SCROLL FOR NEXT