இந்தியா

ரூ.100-ஐ விடைத்தாளுக்குள் வைத்தால் போதும்; மார்க் கிடைக்கும்: மாணவர்களுக்கு குறுக்குவழியைப் புகட்டிய ஆசிரியர் கைது

ஏஎன்ஐ

உ.பி.யில் 10, 12-ம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வு தொடங்கிவிட்ட நிலையில் மாணவர்கள் பொதுத் தேர்வில் எப்படியெல்லாம் ஏமாற்றி மதிப்பெண் வாங்கலாம் என்ற குறுக்கு வழியை ஆசிரியரே கற்றுத்தந்த வீடியோ வெளியாகி வைரலாகியுள்ளது.

உத்தரப் பிரதேச மாநிலம் மவு நகரில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் அதன் முதல்வர் பிரவீன் மால் மாணவர்கள் மத்தியில் ஆற்றிய சர்ச்சைக்குரிய அந்த உரை தான் அவரை கைது செய்ய வழிவகுத்துள்ளது.

தேர்வுக்கு முன்னதாக மாணவர்களுக்கு நடத்தப்படும் ஆலோசனைக் கூட்டத்தில் சில பெற்றோர்களும் அமர்ந்திருக்க பள்ளி முதல்வர் பிரவீன் மால், "எனது மாணவர்கள் ஒருபோதும் தேர்வில் தோற்றுப்போனது இல்லை என்று என்னால் சவால் விட முடியும். மாணவர்களே பொதுத் தேர்வைக் கண்டு நீங்கள் அச்சப்பட ஏதுமில்லை. தேர்வு அறையில் நீங்கள் உங்களுக்குள் பேசிக்கொண்டு விடை எழுதலாம். ஆனால், யாரும் யாரையும் தொட்டுப் பேசாதீர்கள்.

எதற்கும் அஞ்சாதீர்கள். அரசுப் பள்ளி தேர்வு மையங்களில் இருக்கும் ஆசிரியர்கள் அனைவரும் எனது நண்பர்களே. ஒருவேளை காப்பி அடிக்கும்போது மாட்டிக்கொண்டாலும் பயப்படத் தேவையில்லை.

கண்காணிப்பாளர் கன்னத்தில் அறைந்தாலும் கூட பொறுமையாக இருங்கள். எந்த ஒரு கேள்விக்கும் பதில் அளிக்காமல் இருந்துவிடாதீர்கள். விடைத்தாளில் 100 ரூபாய் தாளை வையுங்கள். அப்புறம், ஆசிரியர்கள் கண்களை மூடிக் கொண்டு மதிப்பெண் வழங்குவார்கள். 4 மதிப்பெண் கேள்விக்கான விடையை நீங்கள் தவறாக எழுதினாலும் கூட அவர்கள் மூன்று மதிப்பெண் அளிப்பார்கள்" எனப் பேசியுள்ளார்.

ஜெய் ஹிந்த், ஜெய் பாரத் என அவர் தனது உரையை முடித்தார்.

இதை அங்கிருந்த மாணவர் ஒருவர் தனது செல்போனில் படம் பிடித்ததுடன் அதை முதல்வர் யோகி ஆதித்யநாத்தின் மக்கள் குறைதீர் இணையதளத்தில் பதிவேற்றம் செய்ததோடு புகாரும் அளித்தார். இந்தப் புகாரின் அடிப்படையில் அந்த ஆசிரியர் கைது செய்யப்பட்டுள்ளார்.

56 லட்சம் பேர் தேர்வு எழுதுகின்றனர்..

உத்தரப் பிரதேசத்தில் இந்த ஆண்டு 10, 12-ம் வகுப்பு பொதுத் தேர்வை 56 லட்சம் மாணவ, மாணவிகள் எழுதுகின்றனர். தேர்வில் முறைகேடுகளைத் தடுக்க மாநில அரசு பல்வேறு கெடுபிடிகளை விதித்துள்ளது.

தேர்வு அறையில் சிசிடிவி கண்காணிப்பு மேகரா, வாய்ஸ் ரெக்கார்டர் பொருத்தப்பட்டுள்ளது. இதற்காக 75 மாவட்டங்களில் 7,784 சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. 2 லட்சம் பேர் கண்காணிப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

தேர்வு மையங்களில் 938 பதற்றமானவையாக அறியப்பட்டுள்ளது. அதுவும் 395 தேர்வு மையங்கள் அதிக பதற்றமானவையாகக் கண்டறியப்பட்டுள்ளது.

இது தவிர ட்விட்டர் ஹேண்டில் ஒன்றையும் அறிவித்துள்ளது. அதில், பகிரப்படும் தேர்வு முறைகேடு தொடர்பான புகார்களுக்கு உடனடி நடவடிக்கை எடுக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT