இந்தியா

ஏழை, நடுத்தர மக்களுக்கு இலவச மருத்துவம்: ஆந்திர முதல்வர் ஜெகன் அறிவிப்பு

என்.மகேஷ்குமார்

ஆந்திராவில் ஏழை மற்றும் நடுத்தர மக்களுக்கு இலவச மருத்துவ வசதி வழங்கப்படும் என்று அந்த மாநில முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி அறிவித்துள்ளார்.

ஆந்திராவின் கர்னூலில் நேற்று நடைபெற்ற கண்ணொளி திட்டத்தை அவர் தொடங்கி வைத்து பேசியதாவது, இந்த ஆண்டு ஜூலை 31-ம் தேதி வரை 3-ம் கட்ட கண்ணொளி திட்டம் அமலில் இருக்கும். அதுவரை ஏழைகள், நடுத்தர வர்க்க மக்கள், மாணவ, மாணவியர் அனைவருக்கும் இலவசமாக கண் பரிசோதனை செய்யப்படும். இதில் தேவையானவர்களுக்கு அரசு சார்பில் இலவசமாக கண் அறுவை சிகிச்சை செய்யப்பட்டு, மூக்கு கண்ணாடியும் வழங்கப்படும்.

மாநிலம் முழுவதும் ஏழை, நடுத்தர வர்க்க மக்களுக்கு இலவசமாக மருத்துவ வசதி வழங்க அரசு தீர்மானித்துள்ளது. இதற்காக அரசு மருத்துவமனைகளின் தரத்தை மேம்படுத்த ரூ. 700 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

ஒவ்வொரு மக்களவைத் தொகுதிகளிலும் சிறப்பு மருத்துவமனைகள் நிறுவப்படும். இந்த மருத்துவமனைகள் 24 மணி நேரமும் செயல்படும். இதில் மருத்துவர்கள், செவிலியர்கள், ஊழியர்கள் 24 மணி நேரமும் பணியாற்றுவார்கள். ஆந்திராவில் புதிதாக 25 மருத்துவக் கல்லூரிகள் நிறுவப்படும்.

இவ்வாறு முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி பேசினார்.

SCROLL FOR NEXT