இந்தியாவின் நலனுக்கு எதிராக செயல்பட்டதால் இங்கிலாந்து எம்.பி. டெபி ஆபிரஹாமின் விசா ரத்து செய்யப்பட்டதாக வெளியுறவு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
துபாயில் இருந்து நேற்று முன்தினம் டெல்லி விமான நிலையம் வந்த இங்கிலாந்தின் தொழிலாளர் கட்சியைச் சேர்ந்த எம்.பி. டெபி ஆபிரஹாமின் விசா ரத்து செய்யப்பட்டுள்ளதாகக் கூறி அவரை இந்திய அதிகாரிகள் திருப்பி அனுப்பினர்.
இந்நிலையில், காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்ட விவகாரத்தில் அதை எதிர்த்து டெபி ஆபிரஹாம் கருத்து கூறியதாகவும் இந்திய நலனுக்கு எதிராக செயல்பட்டதாகவும் அதனாலேயே அவரது விசா ரத்து செய்யப்பட்டதாகவும் வெளியுறவு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். விசா ரத்து செய்யப்பட்டது குறித்து டெபி ஆபிரகாமுக்கு பிப்ரவரி 14-ம் தேதியே மின்னஞ்சல் மூலம் தகவல் தெரிவிக்கப்பட்டதாகவும் டெல்லி விமான நிலையம் வரும்போது அவரிடம் இந்திய விசா கிடையாது என்றும் அதிகாரிகள் விளக்கமளித்துள்ளனர்.
இதனிடையே, மத்திய அரசின் நடவடிக்கையை காங்கிரஸ் மூத்த தலைவர் அபிஷேக் சிங்வி வரவேற்றுள்ளார். அவரது ட்விட்டர் பதிவில், ‘ டெபி ஆபிரகாமை திருப்பி அனுப்பியது அவசியமான வரவேற்கத்தக்க நடவடிக்கை. அவர் பாகிஸ்தான் உளவு அமைப்பான ஐஎஸ்ஐயின் மறைமுக ஏஜென்டாக செயல்படுபவர். இந்தியாவின் இறையாண்மைக்கு எதிரான எந்த தாக்குதலையும் முறியடிக்க வேண்டும்’ என்று கூறியுள்ளார்,