டெல்லியில் உள்ள ராணுவத்துக்குக் கட்டுப்பட்ட பாதுகாப்பு கல்வி மற்றும் ஆய்வு நிறுவனத்தை (ஐடிஎஸ்ஏ), "மனோகர் பாரிக்கர் இன்ஸ்டிடியூட் டிஃபென்ஸ் ஸ்டடிஸ் அண்ட் அனாலிசிஸ்" எனப் பெயர் மாற்றி மத்திய பாதுகாப்புதுறை அமைச்சகம் அறிவித்துள்ளது.
முன்னாள் பாதுகாப்புத்துறை அமைச்சரும், கோவா முன்னாள் முதல்வருமான மனோகர் பாரிக்கர் சேவையைப் பாராட்டும் வகையில் அவரின் பெயர் கல்வி மற்றும் ஆய்வு நிறுவனத்துக்கு வைக்கப்பட்டுள்ளதாக அரசு தெரிவித்துள்ளது.
மனோகர் பாரிக்கர் கடந்த 2014-ம் ஆண்டு நவம்பர் 9-ம் தேதி முதல் 2017, மார்ச் 14-ம் தேதி வரை மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சராக இருந்தார். பாரிக்கர் அமைச்சராக இருந்தபோதுதான் பதான்கோட் தாக்குதல், உரி தாக்குதல் போன்றவற்றுக்கு துணிச்சலுடன் இந்திய ராணுவம் பதிலடி கொடுத்தது. கோவாவில் பாஜக ஆட்சியைப் பிடித்த பின் மத்திய அமைச்சர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு, முதல்வராகப் பதவி ஏற்றார். ஆனால், அடுத்த ஓராண்டில் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தார்.
இந்நிலையில் அவரது சேவையைப் பாராட்டி பாதுகாப்பு அமைச்சகத்தின் கீழ் இயங்கும் ஐடிஎஸ்ஏ நிறுவனத்துக்கு பாரிக்கரின் பெயர் சூட்டப்பட்டுள்ளது. கடந்த 1965-ம் ஆண்டு தொடங்கப்பட்ட ஐடிஎஸ்ஏ நிறுவனம், பாதுகாப்புத் துறை தொடர்பான ஆய்வுகள், படிப்புகள் ஆகியவற்றைப் போதிக்கும் நிறுவனமாகும்.
மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தலைமையில் இன்று நிறுவனத்தின் நிர்வாகிகளுடன் நடத்திய ஆலோசனையில் ஐடிஎஸ் நிறுவனத்துக்கு மனோகர் பாரிக்கர் பெயர் சூட்டுவது என முடிவு செய்யப்பட்டது.
இதுகுறித்து பாதுகாப்புத்துறை அமைச்சகம் வெளியிட்ட அறிவிப்பில் கூறுகையில், "மனோகர் பாரிக்கர் தனது பதவிக்காலத்தில் பாதுகாப்புத் துறை அமைச்சகத்தைத் திறம்பட நடத்தினார், பதான்கோட், உரி தாக்குதல்களுக்கு பாரிக்கர் தலைமையில் ராணுவத்தினர் துணிச்சலாகப் பதிலடி கொடுத்தார்கள்.
நேர்மை, பொதுவாழ்வில் அர்ப்பணிப்பு, போராட்டக் குணம், துணிச்சலான குணம் போன்றவற்றை பாரிக்கர் கொண்டவர். பாரிக்கர் அமைச்சராக இருந்தபோது, தேசத்தின் பாதுகாப்பை மேம்படுத்துதல், உள்நாட்டில் பாதுகாப்பு உற்பத்தியை அதிகப்படுத்துதல் போன்ற நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன.
ஒரே பதவி ஒரே பென்ஷன் திட்டத்தை நடைமுறைப்படுத்தியவர் மனோகர் பாரிக்கர்தான். அவரின் சேவைக்கு மரியாதை வழங்கும் வகையில் ஐடிஎஸ்ஏ நிறுவனத்தின் பெயரை மனோகர் பாரிக்கர் ஐடிஎஸ்ஏ நிறுவனம் என மாற்ற முடிவு செய்யப்பட்டுள்ளது" எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.