மனேசரில் தங்க வைக்கப்பட்டிருந்த இந்தியர்கள்: படம் உதவி | ட்விட்டர் 
இந்தியா

248 இந்தியர்களுக்கு கரோனா வைரஸ் பாதிப்பு இல்லை; சீனாவில் இருந்து அழைத்து வரப்பட்டவர்கள் வீட்டுக்கு அனுப்பப்பட்டனர்

ஐஏஎன்எஸ்

சீனாவின் ஹூபே மாகாணத்தில் இருந்து ஏர் இந்தியா விமானம் அழைத்து வரப்பட்ட 500-க்கும் மேற்பட்ட இந்தியர்களில் 248 பேருக்கு கரோனா வைரஸ் பாதிப்பு இல்லை என்று மருத்துவக் கண்காணிப்பில் உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, அவர்கள் வீட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

சீனாவை உலுக்கி எடுத்துவரும் கரோனா வைரஸ் குடும்பத்தைச் சேர்ந்த கோவிட்-19 வைரஸ் தாக்குதலுக்கு இதுவரை 1800க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். 70 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். பெரும்பாலும் ஹூபே மாகாணம், வூஹான் நகரைச் சேர்ந்தவர்கள்தான் எனத் தெரியவந்துள்ளது.
இந்த கோவிட்-19 வைரஸ் 25க்கும் மேற்பட்ட நாடுகளிலும் பரவி, அங்கு மக்கள் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளனர்.

இந்நிலையில், சீனாவில் ஹூபே மாநிலத்தில் சிக்கி இருந்த இந்தியர்கள் 500-க்கும் மேற்பட்டோர் கடந்த மாதத்தில் ஏர் இந்தியா விமானம் மூலம் இந்தியாவுக்கு அழைத்து வரப்பட்டனர். அவர்களுக்கு மருத்துவ சிகிச்சை நடத்தப்பட்டதில் கோவிட்-19 வைரஸ் தொற்று இல்லாவிட்டாலும், 14 நாட்கள் மருத்துவக் கண்காணிப்பில் வைக்கப்பட்டனர்.

இதற்காக டெல்லி அருகே மனேசரில் ராணுவத்துக்குச் சொந்தமான முகாமில் 300-க்கும் மேற்பட்டோர் தங்க வைக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தனர். இந்நிலையில் அவர்களில் யாருக்கும் கோவிட்-19 வைரஸ் தாக்குதல் உறுதி செய்யப்படவில்லை என்பதால் அவர்கள் சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

இதுகுறித்து ராணுவ மேஜர் ஜெனரல் ஆர். தத்தா கூறுகையில், "ராணுவ முகாமுக்கு அழைத்து வரப்பட்ட அனைவரும் உடல்நலத்துடன் ஆரோக்கியமாக இருக்கிறார்கள். அவர்கள் யாருக்கும் கரோனா வைரஸ் தாக்குதல் இல்லை. அவர்கள் சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைக்கப்படுகின்றனர்.

அதன்பின் அடுத்த 14 நாட்களில் ஏதேனும் உடல்நலப் பாதிப்பு ஏற்பட்டால் அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற அறிவுறுத்தியுள்ளோம். 22 மாணவர்களாக 10 குழுக்களாகப் பிரித்துத் தங்கவைத்திருந்தோம். அவர்கள் வைத்திருந்த உடைமைகளிலும் எந்தவிதமான கிருமித் தொற்றும் இல்லை என்பதால், அவர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.

கடந்த 14 நாட்களில் மாணவர்களுக்குக் காலை, மாலை இரு நேரங்களிலும் தீவிர மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டது. மாணவர்களுக்குத் தேவையான கவுன்சிலிங் அளிக்கப்பட்டு அனுப்பப்பட்டனர்" எனத் தெரிவித்தார்.

SCROLL FOR NEXT