கடந்த ஆண்டு டிசமப்ர் 15ம் தேதி ஜாமியா மிலியா இஸ்லாமியா பல்கலைக் கழகத்திற்குள் நுழைந்து போலீஸார் மாணவர்களைத் தாக்கியதாக பல வீடியோக்கள் வைரலாகி வரும் நிலையில் இன்று வரை வந்த வீடியோக்களை தடயவியல் ஆய்வுக்கு அனுப்பப்பட்டுள்ளன என்றும் அவை ஆராயப்பட்டு வருகின்றன என்றும் டெல்லி சிறப்பு போலீஸ் கமிஷனர் பிரவீர் ரஞ்சன் தெரிவித்தார்.
போராட்டக்காரர்களை அடக்கும் ஹெல்மெட் லத்தி உள்ளிட்டவைகளுடன் ஜாமியா மிலியா இஸ்லாமியா பல்கலைக் கழகத்தின் நூலகத்தில் நுழைந்து படித்து கொண்டிருந்த மாணவர்களை போலீஸார் தாக்கியதாக வீடியோக்கள் வெளிவர பரபரப்பு ஏற்பட்டது, காங்கிரஸ் தலைவர் பிரியங்கா காந்தியும் இதற்குக் கடும் கண்டனம் தெரிவித்தார்.
இந்நிலையில் போலீசார் முன்னிலையில் மாணவர்கள் மாணவிகள் தங்கள் கையைக்கட்டியபடி வரிசையாகச் சென்ற வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது.
பழைய நூலகத்தில் எடுக்கப்பட்டுள்ளதான இந்த வீடியோவில் மாணவிகள் கையைக்கட்டியபடி நூலகத்தை விட்டு வெளியேறும் காட்சி பதிவாகியுள்ளது. இவர்களுக்கு அடுத்த படியாக மாணவர்களும் கைகளைக் கட்டியபடி சென்ற காட்சி இடம்பெற்றுள்ளது.
இந்நிலையில் டெல்லி சிறப்பு போலீஸ் கமிஷனர் பிரவீர் ரஞ்சன் கூறும்போது, “சிறப்பு விசாரணைக் குழு வன்முறையை விசாரித்து வருகின்றனர். வீடியோக்கள் ஆராயப்பட்டு சம்பவங்களின் வரிசை நிறுவப்படும்” என்றார்.
அதே போல் துப்பாக்கியால் சுட்டு சிஏஏ எதிர்ப்புப் போராட்ட மாணவர்க்ளை 2 போலீஸார் மிரட்டியதாக எழுந்த புகார்களையும் டெல்லி போலீஸ் மறுத்துள்ளது. இது தொடர்பான வீடியோவில் 2 போலீஸார் துப்பாக்கியால் 3 முறை போராட்டக்காரர்களை நோக்கி சுட்டதாகவும் பிறகு இந்த போலீஸார் மாயமாகி விட்டதாகவும் பதிவாகியுள்ளது. மதுராவில் நடந்த இந்தச் சம்பவத்தை முதலில் மறுத்த போலீஸ் பிறகு, “இது தற்காப்புச் செயல்” என்றதும் குறிப்பிடத்தக்கது.