சரிக்கட்டப்பட்ட மொத்த வருவாய் நிலுவைத் தொகையில் ரூ.14, 697 கோடியை தொலைத் தொடர்பு சேவை நிறுவனங்களான பார்தி ஏர்டெல், வோடபோன் ஐடியா மற்றும் டாடா குழுமம் ஆகியவை தொல்டைத் தொடர்பு துறைக்குச் செலுத்தியுள்ளனர்.
பார்தி ஏர்டெல் நிறுவனம் ரூ.10,000 கோடி நிலுவைத் தொகையைச் செலுத்த வோடபோன் ரூ.2500 கோடியையும் டாடா குழுமம் 2,197 கோடியையும் அரசுக்குச் செலுத்தியுள்ளது.
இதுதவிரவும் ரூ.1000 கோடியை வார இறுதியில் செலுத்துவதாக வோடபோன் ஐடியா உறுதியளித்துள்ளது.
உச்ச நீதிமன்ற உத்தரவுக்குக் கட்டுப்படாமல் அரசுக்கு ஒரு பைசா கூட அளிக்காது இருந்த இந்த நிறுவனங்கள் மீது ஏன் கோர்ட் அவமதிப்பு வழக்குத் தொடரக்கூடாது என்று உச்ச நீதிமன்றம் கடுமையாகக் கேட்டதோடு டெஸ்க் அதிகாரி ஒருவர் இந்த நிறுவனங்கள் மீது பலவந்த நடவடிக்கை தேவையில்லை என்று அனுப்பிய கடித உத்தரவையும் நீதிபதிகள் கடும் கண்டனத்துக்குரியவையாகச் சாடினர்.
இந்த வழக்கு விசாரணை மார்ச் 17ம் தேதிக்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளது.
தொலைத்தொடர்புத் துறையின் மதிப்பீட்டின் படி உரிமத்தொகை, அலைக்கற்றைப் பயன்பாட்டு கட்டணம் உட்பட பார்தி ஏர்டெல் ரூ.35,586 கோடி செலுத்த வேண்டும். வோடபோன் ஐடியா ரூ.53,000 கோடியும் டாடா டெலி சர்வீசஸ் ரூ.13,283 கோடியும் செலுத்த வேண்டியுள்ளது.