காசி மஹாகல் எக்ஸ்பிரஸ் ரயிலில் கடவுள் சிவனுக்காக ஒதுக்கப்பட்ட இருக்கை : படம் | ஏஎன்ஐ. 
இந்தியா

கடவுள் சிவனுக்காக ரயிலில் படுக்கை 'ரிசர்வ்': காசி மஹாகால் எக்ஸ்பிரஸ் ரயிலில் மினி கோயில் உருவாக்கிய அதிகாரிகள்

ஏஎன்ஐ

உத்தரப் பிரதேசம் வாரணாசியில் இருந்து 3 ஜோதிர் லிங்கங்களைக் காணும் வசதியுடன் நேற்று அறிமுகப்படுத்தப்பட்ட காசி மஹாகால் எக்ஸ்பிரஸ் ரயிலில் கடவுள் சிவனுக்காக ஒரு படுக்கையை ரயில்வே துறை ஒதுக்கி, அதைச் சிறிய கோயிலாக மாற்றியுள்ளனர்.

பிரதமர் மோடி தனது மக்களவைத் தொகுதியான வாரணாசிக்கு இரு நாட்கள் பயணமாகச் சென்றுள்ளார். இந்நிலையில் வாரணாசியில் நேற்று காசி மஹாகால் எக்ஸ்பிரஸ் ரயிலை பிரதமர் மோடி கொடியசைத்துத் தொடங்கி வைத்தார்.

இந்த மஹாகல் எக்ஸ்பிரஸ் ரயில், மத்தியப் பிரதேசம், இந்தூர் அருகே இருக்கும் ஓம்கரேஸ்வர், உஜ்ஜைனில் உள்ள மகாகாலேஸ்வர், வாரணாசியில் உள்ள காசி விஸ்வநாதர் ஆகிய 3 ஜோதிர் லிங்க தரிசனங்களை இணைக்கும் வகையில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

ரயிலில் கடவுள் சிவனுக்கு ஒதுக்கப்பட்ட இருக்கையில், பூஜை செய்யும் அதிகாரி : படம் ஏஎன்ஐ

இது ஐஆர்சிடிசி மூலம் தனியாரால் இயக்கப்படும் 3-வது ரயிலாகும். உத்தரப் பிரதேசம் வாரணாசியில் புறப்படும் இந்த மஹாகல் எக்ஸ்பிரஸ் ரயில் லக்னோ வழியாக இந்தூர் வரை 1,102 கி.மீ.க்கு 19 மணிநேரம் பயணிக்கிறது.

இந்த ரயிலில் பி-5 எனும் பெட்டியில் படுக்கை 64-ம் எண்ணைக் கடவுள் சிவனுக்காக முன்பதிவு செய்துள்ளனர். அந்த இருக்கையில் யாரும் அமராமல் அந்த இருக்கையைச் சிறிய கோயிலாகவும் உருவாக்கியுள்ளனர்.

இதுகுறித்து வடக்கு ரயில்வே செய்தித் தொடர்பாளர் தீபக் குமார் நிருபர்களிடம் கூறுகையில், "வாரணாசியில் இருந்து இந்தூர் வரை செல்லும் மஹாகால் எக்ஸ்பிரஸ் ரயிலில் பி-5 பெட்டியில் 64-ம் எண் படுக்கையைக் கடவுள் சிவனுக்காக முன்பதிவு செய்துள்ளோம். அந்த இருக்கையில் யாரும் அமரமாட்டார்கள். முதல் முறையாக ரயிலில் சிறிய கோயில் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த இருக்கை கடவுள் சிவனுக்காக உருவாக்கப்பட்டது என்பதைப் பயணிகள் உணர வேண்டும்" எனத் தெரிவித்தார்.

SCROLL FOR NEXT