இந்தியா

வியாபாரிகள் மூலம் தீவிரவாதத்துக்கு நிதி- என்ஐஏ விசாரணையில் அம்பலம்

செய்திப்பிரிவு

காஷ்மீரில் வியாபாரிகள் மூலம் தீவிரவாதத்துக்கு பணம் விநியோகம் செய்யப்படுவது என்ஐஏ விசாரணையில் தெரியவந்துள்ளது.

காஷ்மீரில் இருந்து 2 தீவிரவாதிகள், ஒரு வழக்கறிஞரை சண்டிகருக்கு காரில் அழைத்துச் சென்ற அந்த மாநில போலீஸ் டிஎஸ்பி தாவிந்தர் சிங் அண்மையில் கைது செய்யப்பட்டார். இந்த வழக்கை தேசிய புலனாய்வு அமைப்பு (என்ஐஏ) விசாரித்து வருகிறது.

டிஎஸ்பியுடன் கைதான ஹிஸ்புல் முஜாகிதீன் தீவிரவாதி நவீத் பாபுவிடம் என்ஐஏ அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இதில் பல்வேறு அதிர்ச்சிகரமான தகவல்கள் வெளியாகி உள்ளன.

இந்தியா, பாகிஸ்தான் இடையே நல்லெண்ண நடவடிக்கையாக கடந்த 2008-ம் ஆண்டில் எல்லை தாண்டிய வணிகத்துக்கு அனுமதி அளிக்கப்பட்டது. இதை பயன்படுத்தி பாகிஸ்தானை சேர்ந்த தீவிரவாத அமைப்புகள், காஷ்மீர் வியாபாரிகள் மூலம் தீவிரவாதிகளுக்கு பணம் விநியோகம் செய்தது என்ஐஏ விசாரணையில் தெரியவந்துள்ளது. பணம் மட்டுமன்றி ஆயுதங்களும் வியாபாரிகள் மூலம் கடத்தப்பட்டுள்ளன.

தீவிரவாதி நவீத் பாபுவிடம் நடத்திய விசாரணையின் அடிப்படையில், எல்லை கட்டுப்பாட்டு பகுதி வியாபாரிகள் சங்க தலைவர் தன்வீர் அகமது வானி அண்மையில் கைது செய்யப்பட்டார். அவரிடம் தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இந்த வழக்கில் மேலும் பல வியாபாரிகள் சிக்குவார்கள் என்று என்ஐஏ வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

SCROLL FOR NEXT