ஹூப்பள்ளி போலீஸாரால் கைது செய்யப்பட்ட காஷ்மீர் மாணவர்கள் 
இந்தியா

பாகிஸ்தானுக்கு ஆதரவாக கோஷம்: காஷ்மீர் மாணவர்கள் 3 பேரை தேசத் துரோக வழக்கில் கைது செய்த கர்நாடக போலீஸார்

பிடிஐ

பாகிஸ்தானுக்கு ஆதரவாக முழக்கமிட்ட காஷ்மீர் மாநிலத்தைச் சேர்ந்த 3 மாணவர்களை கர்நாடகாவின் ஹூப்பள்ளி போலீஸார் தேச துரோக வழக்கில் கைது செய்தனர். அதன்பின் சிஆர்பிசி 169-பிரிவின் அவர்களை ஜாமீனில் விடுவித்தனர்.

இதுகுறித்து ஹூப்பள்ளி போலீஸ் ஆணையர் ராமஸ்வாமி திலீப் நிருபர்களிடம் கூறியதாவது:

ஹூப்பள்ளி நகரில் தனியார் பொறியியல் கல்லூரி செயல்பட்டு வருகிறது. இந்த கல்லூரியில் மத்திய அரசின் இட ஒதுக்கீடு மூலம் காஷ்மீர் மாநிலம் சோபியான் மாவட்டத்தைச் சேர்ந்த அமீர், பாசித், தலிப் 3 மாணவர்கள் படித்து வருகின்றனர்.

புல்வாமா தாக்குதல் நடந்த முதலாம் ஆண்டு நினைவு நாளையொட்டி, கடந்த வெள்ளிக்கிழமையன்று கல்லூரியில் விடுதியில் இந்த 3 மாணவர்களும் பாகிஸ்தானுக்கு ஆதரவாகவும், இந்தியாவுக்கு எதிராகவும் கோஷங்கள் எழுப்பினர். இதுதொடர்பான வீடியோ வாட்ஸ்அப்பில் வைரலாகியது. இதைத் தொடர்ந்து கல்லூரி முதல்வர் பசவராஜ் அனாமி போலீஸார் புகார் அளித்தார்.

கல்லூரியில் மாணவர்களின் ஒற்றுமைக்கும், சமூக ஒருமைப்பாட்டுக்கும் குந்தகம் விளைவிக்கும் வகையில் காஷ்மீர் மாநிலத்தைச் சேர்ந்த 3 மாணவர்கள் பேசுகிறார்கள். இந்தியாவுக்கு எதிராகவும், பாகிஸ்தானுக்கு ஆதரவாகவும் பேசுகின்றனர் எனப் புகாரில் தெரிவித்தார்.

இதையடுத்து போலீஸார் கல்லூரி விடுதிக்குச் சென்று மாணவர்களிடம் விசாரணை நடத்தி கைது செய்தனர்.

மாணவர்கள் மீது ஐபிசி 124 பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த மாணவர்களிடம் விசாரணை நடந்து வருகிறது, கல்லூரி நிர்வாகமும் அந்த மாணவர்களை இடைநீக்கம் செய்துள்ளது.

மாணவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணைக்குப்பின் சிஆர்பிசி 169 பிரிவின் கீழ் பத்திரத்தில் 3 மாணவர்களிடம் கையொப்பம் பெற்றுக்கொண்டு அவர்கள் விடுவிக்கப்பட்டனர். எப்போது விசாரணைக்கு அழைத்தாலும் வர வேண்டும் எனும் நிபந்தனையுடன் விடுவிக்கப்பட்டனர்.

மாணவர்களை நீதிமன்றத்தில் நிறுத்தும்போது அவர்களுக்கு எதிராக போதுமான ஆதாரங்கள் ஏதும் இல்லை என்பதால், சிஆர்பிசி 169 பிரிவின் கீழ் விடுவிக்கப்பட்டனர்.

இவ்வாறு திலீப் தெரிவித்தார்

Amazon.in: ஆன்லைன் ஷாப்பிங் - இலவச ஷிப்பிங் வசதி.

SCROLL FOR NEXT