திருமணமான சில மணிநேரங்களிலேயே பராத் ஊர்வலத்தில் நடனமாடிய மணமகன் சரிந்து விழுந்து உயிரிழந்த அதிர்ச்சி சம்பவம் தெலங்கானாவில் நேற்றிரவு நடந்துள்ளது.
நிஜமாபாத் மாவட்டத்தில் நேற்றிரவு நடைபெற்ற திருமண நிகழ்வின் ஒருபகுதியான ஊர்வலத்தின்போது டி.ஜே இசையமைப்பின் அதிக டெசிபல் சத்தம் காரணமாக மணமகனுக்கு மாரடைப்பு ஏற்பட்டு சம்பவ இடத்திலேயே உயிர் பிரிந்துள்ளது. மணமகள் ஸ்வப்னா மற்றும் கணேஷின் தாயின் தாளமுடியாத அழுகைகளின் ஓசையினால் அப்பகுதியெங்கும் இருள் கவ்வத் தொடங்கியது.
இசை நிகழ்ச்சிகள் மற்றும் ஊர்வலங்களில் டி.ஜே ஒலி அமைப்புகளைப் பயன்படுத்துவதற்கான முழுமையான தடை அமலில் இருக்கும்போது இத்தகைய சம்பவம் நடந்துள்ளது பலரையும் அதிர்ச்சியடைய வைத்துள்ளது.
நிஜாமாபாத்தில் நடைபெற்ற இச்சம்பவம் குறித்து ஊடகங்கள் தெரிவிப்பதாவது:
நிஜமாபாத்தின் போத்தன் நகரில் விமரிசையாக நடைபெற்ற திருமணத்தின் பின்னர் மாலைநேரத்தில் மணமகன் எம் கணேஷ் (25), குடும்பத்தினர், தம்பதியினருடன் ஒரு பராத் எனப்படும் கல்யாண ஊர்வலத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டது. இதில் பராத்தின் போது, ஒரு டி.ஜே அமைப்பு உரத்த இசையை வாசிக்கத் தொடங்கியது.
ஊர்வலத்தில் சமீபத்திய ஹிட் பாடல்களை குழு இசைக்கத் தொடங்கும்போது, அவரது உறவினர்கள் இசைக்கு நடனமாடத் தொடங்கினர். ஆனால் அப்போது கூட இசையின் கர்ணகடூரமான ஓசையின் காரணமாக சிறிது நேரம் கழித்து, காரில் அமர்ந்திருந்த கணேஷ் சங்கடமாக உணர ஆரம்பித்தார். அதனால் கலவரமான முகவெளிப்பாடோடு காரை விட்டு இறங்காமலேயே இருந்தார்.
ஆனால் பராத் (கல்யாண ஊர்வலம்) முன்னேறும்போது, அவரும் காரை விட்டு இறங்கிவந்து சிறிது நேரம் நடனத்தில் சேர்ந்து ஆட ஆரம்பித்தார். பின்னர், அவர் மிகவும் சங்கடமாகி, ஊர்வலத்திலேயே சரிந்து விழுந்தார்.
அவர் அருகிலுள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார், ஆனால் அவர் இறந்துவிட்டதாக மருத்துவர்கள் அறிவித்தனர். திடீர் இதய அடைப்பு (cardiac arrest) காரணமாக அவர் இறந்திருக்கலாம் என்று மருத்துவர்கள் தெரிவித்தனர்.
'பராத்' போது இசைக்கப்பட்ட உயர் டெசிபல் ஒலி மணமகனுக்கு இருதய பிரச்சினையைத் தூண்டியிருக்கலாம் என்று நம்பப்படுகிறது.
இவ்வாறு நிஜமாபாத் சம்பவம் குறித்து ஊடகங்கள் தெரிவித்துள்ளன.