முதல்வர் உத்தவ் தாக்கரே தலைமையிலான சிவசேனா கூட்டணி அரசு கொண்டு வந்துள்ள ரூ.10 விலையிலான சிவ போஜன் திட்டத்துக்கு அமோக வரவேற்பு கிடைத்துள்ளது.
மகாராஷ்டிராவில் கடந்த ஜனவரி 26-ம் தேதி சிவ போஜன் திட்டத்தை முதல்வர் உத்தவ் தாக்கரே தொடங்கிவைத்தார். இதைத் தொடர்ந்து அடுத்த 17 நாட்களில் மொத்தம் 2,33,738 பேர் இந்தத் திட்டத்தின் கீழ் ரூ.10 விலையில் சிவ போஜன் உணவைச் சாப்பிட்டுள்ளனர். இதற்காக 139 சிவ போஜன் விநியோக மையங்கள் தொடங்கப்பட்டுள்ளன. நாள்தோறும் ஒரு மையத்தில் சராசரியாக 13,750 சாப்பாடுகள் விற்பனை செய்யப்படுகின்றன.
இதுகுறித்து அரசு மூத்த அதிகாரி ஒருவர் கூறும்போது, “மதிய நேரங்களில் மட்டும் இந்த சிவ போஜன் திட்டத்தின் கீழ் ரூ.10 விலையில் சாப்பாடு வழங்கி வருகிறோம். இதற்கு அமோக வரவேற்பு கிடைத்துள்ளது.
ஏராளமானோர் வரிசையில் நின்று இந்த சாப்பாட்டை வாங்கிச் சாப்பிடுகின்றனர். முதல் நாளில் மட்டும் 11,300 சாப்பாடுகள் விற்பனையாயின. அதற்கு அடுத்த நாளே இதைச் சாப்பிடுவோரின் எண்ணிக்கை 2 மடங்கானது.
இந்தத் திட்டத்தை முதல்வர் உத்தவ் தாக்கரே, தனிப்பட்ட முறையில் கண்காணித்து வருகிறார். மக்களுக்கு தரமான, சுத்தமான உணவு கிடைக்கவேண்டும் என்பதை அதிகாரிகள் உறுதிப்படுத்த வேண்டும் என்று முதல்வர் அறிவுறுத்தியுள்ளார்.
திட்டம் தொடங்கிய சில நாட்களுக்குப் பின்னர் சிவ போஜன் உணவுத் திட்ட வாடிக்கையாளர் களிடம், முதல்வர் உத்தவ் தாக்கரே வீடியோ கான்பரன்ஸ் வசதி மூலம் பேசி அவர்களின் கருத்துகளை கேட்டறிந்தார். பலர் இந்தத் திட்டத்தை வரவேற்று, முதல்வருக்கு வாழ்த்து தெரிவித்தனர்” என்றார் அவர்.
10 ரூபாய் சாப்பாடு திட்டத்தின் கீழ் சாதம், பருப்பு, காய்கறி கூட்டு, 2 சப்பாத்திகள் வழங்கப்படுகின்றன. இந்தத் திட்டத்தில் ஒரு சாப்பாடு தயாரிக்க அரசுக்கு நகர்ப்புறங்களில் ரூ.50-ம், ஊரகப் பகுதிகளில் ரூ.35-ம் செலவாகிறது. ஆனால் ஏழை மக்களுக்கு மானிய விலையில் உணவு கிடைக்கவேண்டும் என்ற நல்லெண்ண அடிப்படையில் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. செலவுத் தொகையை மாநில அரசே ஏற்கிறது.