ஜோதிராதித்ய சிந்தியா விரும்பினால் சாலையில் இறங்கி போராடலாம் என்று மத்திய பிரதேச முதல்வர் கமல்நாத் தெரிவித்துள்ளார்.
கடந்த 2018 நவம்பரில் மத்திய பிரதேச சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற்றது. இதில் காங்கிரஸ் அதிக இடங்களில் வெற்றி பெற்று ஆட்சியைப் பிடித்தது. மாநில முதல்வர் பதவிக்கு கமல்நாத், ஜோதிராதித்ய சிந்தியா இடையே கடும் போட்டி நிலவியது. இறுதியில் கமல்நாத் முதல்வராகப் பதவியேற்றார். அன்று முதல் இருவருக்கும் இடையே மோதல் நீடித்து வருகிறது.
கடந்த ஆண்டு இறுதியில் ஜோதிராதித்ய சிந்தியா தனது ட்விட்டர் பக்கத்தின் அடைமொழியை திருத்தினார். முன்னாள் எம்.பி., முன்னாள் அமைச்சர் என்ற அடைமொழியை நீக்கிவிட்டு பொது ஊழியன், கிரிக்கெட் ஆர்வலர் என்று மட்டும் ட்விட்டரில் அவர் குறிப்பிட்டார்.
இந்நிலையில் திகம்கர்க் மாவட்டம் குடிலா கிராமத்தில் அண்மையில் பேசிய ஜோதிராதித்ய சிந்தியா, ‘‘காங்கிரஸின் தேர்தல் வாக்குறுதி அறிக்கையை புனித நூலாகக் கருதுகிறோம். அதில் மக்களுக்கு அளிக்கப்பட்ட அனைத்து வாக்குறுதிகளையும் மாநில அரசு நிறைவேற்ற வேண்டும். இல்லையெனில் மக்களோடு சேர்ந்து நானும் சாலையில் இறங்கி போராடுவேன்" என்றார்.
இதுகுறித்த நிருபர்களின் கேள்விக்கு முதல்வர் கமல்நாத்கூறும்போது, "ஜோதிராதித்ய சிந்தியா விரும்பினால் சாலையில் இறங்கி போராடலாம்" என்றார். இந்த மோதல் போக்கு முற்றினால் மத்திய பிரதேச காங்கிரஸில் பிளவு ஏற்படலாம் என்று அரசியல் நோக்கர்கள் தெரிவித்துள்ளனர்.