குடியுரிமைச் சட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து டெல்லி ஷாகின் பாக் பகுதியில் போராட்டம் நடத்தி வரும் குழுவினர் நாளை மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை சந்தித்து பேசவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இருப்பினும் போராட்டக்குழுவில் ஒரு தரப்பினர் இந்த சந்திப்புக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
மத்திய அரசு குடியுரிமைச் சட்டத்தில் திருத்தம் கொண்டுவந்து சட்டமாக்கியுள்ளது. இந்த சட்டத்தில் பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், வங்கதேசம் நாடுகளில் இருந்து ஆவணங்கள் இன்றி அகதிகளாக வரும் இந்துக்கள், கிறிஸ்தவர்கள், சீக்கியர்கள், பார்சிகள், ஜெயின் மதத்தினர், பவுத்த மதத்தினர் ஆகியோருக்கு இந்தியக் குடியுரிமை வழங்க, குடியுரிமை திருத்தம் கொண்டு வரப்பட்டுள்ளது.
இந்த சட்டத்துக்கு வடகிழக்கு மாநிலங்களில், மேற்கு வங்கம், டெல்லி, பிஹார் உள்ளிட்ட மாநிலங்களில் கடும் எதிர்ப்புக் கிளம்பியுள்ளது. நாட்டின் பல பகுதிகளில் போராட்டங்கள் நடந்து வருகின்றன. குறிப்பாக டெல்லியின் ஷாகின்பாக் பகுதியில் இரண்டு மாதங்களாக தொடர் போராட்டங்கள் நடந்து வருகின்றன. பெண்கள், குழந்தைகளும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
யூனியன் பிரதேசமான டெல்லியில் இஸ்லாமிய மக்களின் போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வர மத்திய உள்துறை அதிகாரிகளும், டெல்லி போலீஸாரும் பல சுற்று பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர். இந்தநிலையில், குடியுரிமைச் சட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து டெல்லி ஷாகின் பாக் பகுதியில் போராட்டம் நடத்தி வரும் குழுவினர் நாளை மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை சந்தித்து பேசவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
போராட்டுக்குழுவைச் சேர்ந்த அசீப் துபானி இதுகுறித்து கூறுகையில் ‘‘மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை நாளை சந்திக்கவுள்ளோம். பெண்களும் பிரதிநிதிகள் குழுவில் இடம் பெறுவார்கள்’’ எனக் கூறினார்.
இருப்பினும் போராட்டக்குழுவில் ஒரு தரப்பினர் இந்த சந்திப்புக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
ஷாகின் பாக் பகுதியில் தொடர்ந்து போராட்டம் நடத்த வேண்டும் அமித் ஷாவை சந்தித்து பேசக் கூடாது என அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.