மத்தியஅமைச்சர் ரவி சங்கர் பிரசாத் : கோப்புப்படம் 
இந்தியா

மத்திய அமைச்சர் ரவி சங்கர் பிரசாத்துக்கு கேரள நீதிமன்றம் நோட்டீஸ்

பிடிஐ

காங்கிரஸ் எம்பி. சசி தரூர் தாக்கல் செய்த அவமதிப்பு வழக்கில் மத்திய சட்டத்துறை அமைச்சர் ரவி சங்கர் பிரசாத் மே 2-்ம தேதி நேரில் ஆஜராகத் திருவனந்தபுரம் தலைமை ஜுடிசியல் நீதிமன்றம் சம்மன் அனுப்பியுள்ளது.

சசி சரூர் மனைவி சுனந்தா புஷ்கர் இறப்பு தொடர்பாகச் சர்ச்சைக்குரிய கருத்துக்களை ரவிசங்கர் பிரசாத் தெரிவித்தார். இதையடுத்து, கடந்த 2018-ம் ஆண்டு டிசம்பர் மாதம் காங்கிரஸ் எம்.பி. சசி தரூர் தாக்கல் செய்த அவமதிப்பு வழக்கில் இந்த சம்மனை நீதிமன்றம் அனுப்பியுள்ளது.

சசி தரூர் தாக்கல் செய்த மனுவில், " சுனந்தா புஷ்கர் இறப்பு விஷயத்தில் டெல்லி போலீஸார் விசாரணை நடத்தி இறுதி அறிக்கையை கூடுதல் பெருநகர மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் சமர்பித்துவிட்டார்கள். குற்றப்பத்திரிகையில் ஐபிசி 308,498 பிரிவு மட்டுமே சேர்க்கப்பட்டுள்ளது. சுனந்தா புஷ்கர் கொலை செய்யப்படவில்லை என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

ஆனால், கடந்த 2018, அக்டோபர் 28-ம் தேதி அதிகாலை 5.38 மணிக்கு ரவிசங்கர் பிரசாத் ஒரு வீடியோவை அவரின் ட்விட்டர் தளத்தில் பதிவிட்டார். அதில் என்னைப் பற்றி தவறான, பொய்யான, உண்மைக்கு மாறான தகவல்களையும், மதிப்புக்குறைவான வார்த்தைகளையும் , கொலைகாரர் என்ற வார்த்தையையும் பயன்படுத்தியுள்ளார். அது எனது மதிப்புக்குக் களங்கம் விளைவிப்பது மட்டுமல்லாமல், மக்கள் மத்தியில் என்னை மோசமாகச் சித்தரிக்கும் வகையில் அந்தக் கருத்து இருக்கிறது.

இந்த கருத்துக்கு ரவிசங்கர் பிரசாத் நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்க வேண்டும்" எனத் தெரிவித்துள்ளார்.

மேலும், சசி தரூர் தனது வழக்கறிஞர் மூலம் ரவி சங்கர் பிரசாத்துக்கு நோட்டீஸும் அனுப்பினார். அந்த நோட்டீஸ் கிடைத்த 48 மணிநேரத்துக்குள் மன்னிப்பு கோரவேண்டும் என்று குறிப்பிட்டிருந்தார். ஆனால், தான் தவறாக எதையும் தெரிவிக்கவில்லை, ஆதலால் மன்னிப்புகோர முடியாது என்று ரவிசங்கர் பிரசாத் தன் நிலைப்பாட்டில் நிலையாக இருந்தார்.

இதையடுத்து திருவனந்தபுரம் ஜூடிசியல் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் ரவி சங்கர் பிரசாத்துக்கு எதிராக சசி தரூர் தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரணைக்கு எடுத்துக்கொண்ட நீதிபதி, மே 2-ம் தேதி நேரில் ரவிசங்கர் பிரசாத் ஆஜராக உத்தரவிட்டார்

SCROLL FOR NEXT