இந்தியா

காங்கிரஸின்  ‘திடீர் மறைவினால்’ டெல்லி தேர்தலில் பாஜக தோற்றது: பிரகாஷ் ஜவடேகர்

பிடிஐ

டெல்லி தேர்தலில் பாஜக தோல்வியடைந்ததற்கு காங்கிரஸ் கட்சியின் ‘திடீர் மறைவு’தான் காரணம் என்று மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் தெரிவித்துள்ளார்.

70 இடங்களுக்கான சட்டப்பேரவைத் தேர்தலில் கேஜ்ரிவால் தலைமை ஆம் ஆத்மி கட்சி 62 இடங்களில் வெற்றி பெற, பாஜக 8 இடங்களில் வெல்ல காங்கிரஸ் பூஜ்ஜியமானது.

இந்நிலையில் பிரகாஷ் ஜவடேகர் கூறும்போது, “டெல்லியில் பாஜக தோல்விக்கு காங்கிரஸ் கட்சியின் திடீர் மறைவுதான் காரணம். காங்கிரஸ் தானாகவே மறைந்ததா அல்லது மக்கள் காங்கிரஸை மறந்தனரா, காங்கிரஸ் வாக்குகள் ஆம் ஆத்மி பக்கம் திரும்பியதா என்பதெல்லாம் முற்றிலும் வேறு ஒரு விவாதமாகும்.

காங்கிரஸ் மறைவினால் ஆம் ஆத்மிக்கும் பாஜகவும் நேரடி மோதல் ஏற்பட்டது. எங்களுக்கு 42% வாக்குகளும் ஆம் ஆத்மிக்கு 42% வாக்குகளும் கிடைக்கும் என்று நினைத்தோம் ஆனால் ஆம் ஆத்மிக்கு 51% வாக்குகள் கிடைத்தது எங்களுக்கோ 39% வாக்குகள் கிடைத்தன.

இந்த விஷயங்கள் அனைத்தையும் பாஜக ஆராய்ந்தது” என்றார். அரவிந்த் கேஜ்ரிவாலை பயங்கரவாதி என்று அழைத்ததால் தோல்வி என்று கருதுகிறீர்களா என்ற கேள்விக்கு ஜவடேகர், ‘நான் அது போன்று கூறவேயில்லை’ என்றார். அதாவது கேஜ்ரிவால் தன்னை அராஜகவாதி என்று கூறிக் கொண்டார், அராஜகவாதிக்கும் பயங்கரவாதிக்கும் வேறுபாடில்லை என்று தான் கூறினேன், என்றார்.

அமித் ஷா நேற்று டெல்லி தேர்தல் தோல்விக்கு பாஜக தலைவர்களின் ‘கோலி மாரோ’, இந்தியா-பாகிஸ்தான் மேட்ச் என்றெல்லாம் பாஜக தலைவர்கள் பேசியதே காரணம், அப்படியெல்லாம் பேசியிருக்கக் கூடாது என்று கூறியது பற்றி ஜவடேகர் கூறும்போது, “தோல்விக்கு மற்ற காரணங்களும் இருக்கலாம், மறு ஆய்வு நடக்கும்” என்றார்.

SCROLL FOR NEXT