டெல்லி சட்டப்பேரவைத் தேர்தலை தொடர்ந்து பிஹாரில் தேர்தல் நடைபெற உள்ளது. இங்கு எந்த ஒரு கட்சிக்கும் தனிப் பெரும்பான்மை பெறும் வாய்ப்புகள் பல ஆண்டுகளாக இல்லாமல் உள்ளது.
எனவே, ஐக்கிய ஜனதா தளம் (ஜேடியூ) தலைவர் நிதிஷ்குமார் தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி பிஹாரில் அமைந்துள்ளது. இதில், பாஜக மற்றும் மத்திய அமைச்சர் ராம்விலாஸ் பாஸ்வானின் லோக் ஜனசக்தியும் இடம் பெற்றுள்ளது. எதிர்க்கட்சியாக லாலுவின் ராஷ்டிரிய ஜனதா தளம் தலைமையிலான மெகா கூட்டணி உள்ளது. இதன் உறுப்பினர்களாக காங்கிரஸ், இந்துஸ்தான் அவாம் மோர்ச்சா மற்றும் ராஷ்டிரிய லோக் சமதா ஆகிய மூன்று கட்சிகள் உள்ளன.
இந்நிலையில், மக்களவை தேர்தலில் மீண்டும் பெற்ற வெற்றியால் பாஜக பிஹாரில் தனித்து போட்டியிட விரும்பியது. இதனால், வெளியான அக்கட்சி தலைவர்களின் அறிக்கைகளால் கிளம்பிய சர்ச்சைக்கு அமித் ஷா முற்றுப்புள்ளி வைத்தார். இதையடுத்து, ஜேடியூவை விட அதிக தொகுதிகளில் போட்டியிட பாஜக விரும்பியது. அதிக இடங்களில் வெற்றி பெறுவதன் மூலம் தங்கள் கட்சி தலைவர்கள் முதல் அமைச்சராக வேண்டும் என்பதும் பிஹார் பாஜகவினரின் விருப்பம்.
இந்த சூழலை டெல்லி தேர்தல் முடிவுகள் மாற்றி அமைத்து விட்டன. இதன் பாதிப்பாக ஜேடியூ வழக்கம் போல் சம தொகுதி அல்லது அதைவிட அதிகமாகக் கேட்கத் தயாராகி வருகிறது. டெல்லியின் முடிவுகள் குறித்து முதல்வர் நிதிஷ், ‘மக்களே எஜமானர்கள்' என ஒரு வரியில் கருத்து கூற பிஹார் பாஜகவினர் அமைதி காக்கின்றனர். எனவே, டெல்லி முடிவுகளின் தாக்கம் தனக்கு பிஹாரில் பாதிப்பை ஏற்படுத்தும் என பாஜகவும் கருதுகிறது.
இதேபோல், காங்கிரஸ் ஆளும் பஞ்சாபில் 2-வது பெரிய கட்சியாக ஆம் ஆத்மி உருவாகி வருகிறது. சட்டப்பேரவையில் தற்போது ஆம் ஆத்மிக்கு 20 எம்எல்ஏக்கள் உள்ளனர். இங்கு கடந்தமுறை ஆட்சி செய்த கூட்டணிக் கட்சிகளில் சிரோமணி அகாலி தளம் 15, பாஜகவுக்கு 3 எம்எல்ஏக்கள் உள்ளனர். 2013-ல் டெல்லியில் ஆட்சி அமைத்த பின் வந்த மக்களவை தேர்தலில் நாட்டின் பெரும்பாலான மாநிலங்களில் தனது வேட்பாளர்களை நிறுத்தினார் கேஜ்ரிவால். ஆனால், அவருக்கு பஞ்சாபில் மட்டுமே 3 எம்.பிக்கள் கிடைத்தனர். 2019 மக்களவை தேர்தலிலும் ஆம் ஆத்மியின் ஒரு எம்.பி. வென்றுள்ளார்.
எனவே, டெல்லி தேர்தலின் முடிவுகள் பஞ்சாப் சட்டப்பேரவை தேர்தலிலும் தாக்கத்தை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. இங்கு ஏற்கனவே ஆம் ஆத்மி உறுதிபெற்று வரும் நிலையில் காங்கிரஸ் பாதிக்கப்படும் வாய்ப்புகள் ஏற்பட்டுள்ளன. இந்த காரணத்திற்கு அஞ்சியே மக்களவை தேர்தலில் காங்கிரஸ் ஆம் ஆத்மியுடன் கூட்டு சேர மறுத்து வந்ததும் குறிப்பிடத்தக்கது.