இந்தியா

எம்.பி., எம்.எல்.ஏ.க்களை மதிக்க வேண்டும்: விதிகளை மீறும் அதிகாரிகள் மீது நடவடிக்கை

செய்திப்பிரிவு

மக்கள் பிரதிநிதிகளிடம், அரசு உயர் அதிகாரிகள் நடந்துகொள்ள வேண்டிய நெறிமுறை விதிமுறைகளை மீறுவதாக புகார் எழுந்துள்ளது. இதையடுத்து, மத்திய பணியாளர் நலன் மற்றும் பயிற்சித் துறை அமைச்சகம் அனைத்து மாநில தலைமைச் செயலாளர்களுக்கும் அனுப்பி உள்ள சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது:

நாடாளுமன்ற மக்களவை உறுப்பினர்கள் (எம்பி) மற்றும் மாநில சட்டப்பேரவை உறுப்பினர்கள் (எம்எல்ஏ) மக்களின் பிரதிநிதிகள் ஆவர். நமது ஜனநாயக நடைமுறையில் அவர்களுக்கு முக்கிய இடம் உள்ளது. மக்கள் பிரதிநிதிகளின் கடமையின்படி, மத்திய மற்றும் மாநில அரசுகளின் பல்வேறு துறைகளிடமிருந்து அவ்வப்போது தகவல்களை கோருவது அல்லது ஆலோசனைகள் கூறுவது அல்லது அதிகாரிகளுடன் நேர்காணல் நடத்துவது என்பது அவசியமானது ஆகும்.

அரசு நிர்வாகத்துக்கும் மக்கள் பிரதிநிதிகளுக்கும் இடையிலான தகவல் பரிமாற்றம் தொடர்பாக பணியாளர் நலத் துறை விதிமுறைகளை வெளியிட்டுள்ளது. இதை அவ்வப்போது நினைவுபடுத்தியும் வருகிறோம். எம்.பி., எம்.எல்.ஏ.க்களின் கடிதங்களுக்கு அதிகாரிகள் முறையாக பதில் அளிக்க வேண்டும் எனவும் அலுவலக நடைமுறை தொடர்பான கையேட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது.

எனவே, மேற்கண்ட விதிமுறைகளை அனைத்து துறை சார்ந்த அரசு அதிகாரிகளும் கண்டிப்பாக பின்பற்ற வேண்டும். விதிகளை மீறுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். இந்த தகவலை அனைத்து துறை அதிகாரிகளுக்கும் தெரிவிக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT