டெல்லி சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி ரூ.81.67 கோடிக்கு தேர்தல் பத்திரங்கள் விற்பனை செய்யப்பட்டிருப்பது தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் மூலம் தெரியவந்துள்ளது.
அரசியல் கட்சிகள் ரொக்கமாக நன்கொடைகள் பெறுவதை தடுக்கும் வகையில் கடந்த 2017-ம் ஆண்டில் தேர்தல் நிதி பத்திரங்கள் அறிமுகம் செய்யப்பட்டன. பாரத ஸ்டேட் வங்கியின் குறிப்பிட்ட கிளைகளில் தனிநபர், நிறுவனங்கள் இந்த பத்திரங்களை வாங்கலாம். ஒவ்வொரு காலாண்டிலும் முதல் பத்து நாட்கள் இவை விற்கப்படும். இதுவரை ரூ.6,210 கோடிக்கு தேர்தல் பத்திரங்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன.
இந்நிலையில் டெல்லி சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி எவ்வளவு தொகைக்கு தேர்தல் பத்திரங்கள் விற்பனை செய்யப்பட்டன என்பது குறித்து தகவல் அறியும் உரிமைச் சட்டத்தில் சமூக ஆர்வலர் லோகேஷ் பத்ரா கேள்வி எழுப்பினார்.
இதற்கு பாரத ஸ்டேட் வங்கி அளித்துள்ள பதிலில், “டெல்லி சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி 139 தேர்தல் பத்திரங்கள் விற்பனை செய்யப்பட்டன. இதில் 78 பத்திரங்கள் தலா ரூ.1 கோடி மதிப்பு கொண்டவை. 34 பத்திரங்கள் ரூ.10 லட்சம் மதிப்பும் 27 பத்திரங்கள் ரூ.1 லட்சம் மதிப்பும் கொண்டவை. ஒட்டுமொத்தமாக ரூ.81.67 கோடிக்கு தேர்தல் பத்திரங்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.