2002-ம் ஆண்டு உ.பி.மாநிலத்தை உலுக்கிய நிதிஷ் கதாரா கொலை வழக்கில் பகுஜன் சமாஜ் கட்சி தலைவரின் வாரிசுகளான விகாஸ் யாதவ், விஷால் யாதவ், மற்றும் 3-வது குற்றவாளியான சுக்தேவ் பெஹல்வான் ஆகியோருக்கு அளிக்கப்பட்ட தண்டனையை உச்ச நீதிமன்றம் உறுதி செய்தது.
இந்த வழக்கில் டெல்லி உயர்நீதிமன்றம் இந்த ஆண்டு பிப்ரவரி மாதம் தீர்ப்பளிக்கும் போது, விகாஸ் யாதவ், மற்றும் விஷால் யாதவ் ஆகியோருக்கு 30 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்தது. மேலும் இதில் 25 ஆண்டுகள் கட்டாயமாக இவர்கள் சிறையில் கழித்தேயாக வேண்டுமென்று உத்தரவு பிறப்பித்தது. மேலும் இருவருக்கும் தலா ரூ.54 லட்சம் அபராதமும் விதித்தது.
இந்த கொலை வழக்கின் 3-வது குற்றவாளியான சுக்தேவ் பெஹெல்வானுக்கும் 20 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.
காஸியாபாத்தில் நிதிஷ் கதாராவை ஒரு திருமண நிகழ்ச்சியில் விகாஸ் மற்றும் விஷால் யாதவ் ஆகியோர் கடத்திச் சென்று கொலை செய்தனர், அதாவது இவர்களது சகோதரி பாரதி என்பவர் நிதிஷ் கதாராவை காதலித்து வந்தார். இதனை விரும்பாத விஷால், விகாஸ் யாதவ் அவரைக் கடத்தி கொலை செய்ததாக புகார் எழுந்தது.
இதனையடுத்து, ஏப்ரல் 22, 2002-ல் இருவரையும் மத்திய பிரதேசத்தில் வைத்து போலீஸ் கைது செய்தது.
ஏப்ரல் 2, 2008-ல் சிறப்பு நீதிமன்றம் இந்த வழக்கை நுணுக்கமாக ஒவ்வொரு நாளும் விசாரணை செய்தது. ஏப்ரல் 2008-ல் விசாரணை முடிவுக்கு வந்தது.
மே, 30-ம் தேதி விகாஸ், மற்றும் விஷால் குற்றவாளிகள் என சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்து, ஆயுள் தண்டனை விதித்தது. இந்த வழக்கில் தொடர்புடைய 3-வது நபர் சுக்தேவ் பெஹெல்வான் குறித்த விசாரணை டெல்லி நீதிமன்றம் ஒன்றில் தனியே நடைபெற்று வந்தது. அவருக்கும் டெல்லி நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பளித்தது.
ஏப்ரல் 2, 2014-ல் சிறப்பு நீதிமன்ற தீர்ப்பை உயர்நீதிமன்றம் உறுதி செய்தது.
தற்போது உச்ச நீதிமன்றமும் விகாஸ், விஷால் யாதவ் மற்றும் சுக்தேவ் தண்டனைகளை உறுதி செய்துள்ளது.