டெல்லி ராம் லீலா மைதானத்தில் வரும் 16ம் தேதி நடக்கும் பதவி ஏற்பு விழாவுக்கு வந்து உங்கள் மகனுக்கு ஆசி வழக்கிடுங்கள் என்று டெல்லி மக்களுக்கு முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால் அழைப்பு விடுத்துள்ளார்
டெல்லியில் நடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி அமோக வெற்றி பெற்று 3-வது முறையாக ஆட்சியைப் பிடித்துள்ளது. மொத்தமுள்ள 70 தொகுதிகளில் 62 தொகுதிகளை ஆம் ஆத்மி கட்சி கைப்பற்றி ஆட்சியைத் தக்கவைத்தது. பாஜக 8 இடங்களை வென்றது. காங்கிரஸ் கட்சி எந்த இடத்தையும் கைப்பற்றவில்லை.
இந்நிலையில் டெல்லி மாநிலத்தின் முதல்வராக மூன்றாவது முறையாக அரவிந்த் கேஜ்ரிவால் வரும் 16-ம் தேதி பதவி ஏற்கிறார். டெல்லி ராம்லீலா மைதானத்தில் வரும் ஞாயிற்றுக்கிழமை நடக்கும் நிகழ்ச்சிக்கு வருமாறு டெல்லி மக்களுக்கு முதல்வர் கேஜ்ரிவால் அழைப்பு விடுத்துள்ளார்.
அரவிந்த் கேஜ்ரிவால் ட்விட்ரில் வெளியிட்ட பதிவில் " டெல்லி மக்களே, உங்கள் மகன் டெல்லி முதல்வராக மூன்றாவது முறையாகப் பதவி ஏற்க இருக்கிறேன். கண்டிப்பாகவந்து நீங்கள் ஆசி வழங்கிட வேண்டும். வரும் 16, ஞாயிற்றுக்கிழமை ராம் லீலா மைதானத்தில் நிகழ்ச்சிக்கு வந்துவிடுங்கள்" என அழைப்புவிடுத்துள்ளார்
ஆம் ஆத்மி கட்சித் தொண்டர்களுக்கு அந்த கட்சியின் நிறுவனர் அரவிந்த் கேஜ்ரிவால் எழுதிய கடிதத்தில் கூறியிருப்பதாவது:
ஆம் ஆத்மி கட்சிக்கு அனைத்து தரப்பிலிருந்தும் ஆதரவு கிடைத்துள்ளது. நம் பணிக்கு கிடைத்த செய்தியாக மக்கள் இதை அளித்து, அன்பை வெளிப்படுத்தியுள்ளார்கள். நாடுமுழுவதும் உள்ள மக்களுக்கு நம்முடைய அரசு மாதிரி அரசாக இருக்க வேண்டும் என்பதற்காகத் தொடர்ந்து பணியாற்ற உங்கள் ஆதரவை நான் எதிர்பார்க்கிறேன்.
கல்வி, சுகாதாரம், குடிநீர், மின்சாரம், பெண்கள் பாதுகாப்பு, அதிகாரமளித்தல் உள்ளிட்டவை பிரதான அரசியல் விஷயங்களாக மாறி வென்றுள்ளன. நாம் வழங்கிய அடிப்படை வசதிகள் டெல்லியில் உள்ள லட்சக்கணக்கான மக்கள் மதிப்புடன் கவுரமாக வாழ உதவியுள்ளது, அவர்களுக்கான வாய்ப்புகளைத் திறந்துவிட்டு, பொருளாதாரத்தை வளர்த்துள்ளோம்.
நேர்மையா அரசியல், நாடுமுழுவதும் சிறந்த அரசு நடத்துவதற்கு ஒரு அடையாளமாக நாம் உருவாக்கியுள்ளோம். அடுத்த 5 ஆண்டுகளை டெல்லியை மக்கள் விரும்பி வாழும் இடமாகவும், உலகின் மற்ற நகரங்களோடு ஒப்பிடும்போது சிறந்த நகராகவும் மாற்ற வேண்டும். என் மீது வைத்த நம்பிக்கைக்கும், அளித்த ஆதரவுக்கும் நன்றி. உங்களின் ஆதரவின்றி எந்த செயலையும் வெற்றிகரமாகச் செய்ய முடியாது" எனத் தெரிவித்துள்ளார்