ஜப்பானில் உள்ள யோககாமா துறைமுகத்தில் நிறுத்தப்பட்டுள்ள டைமண்ட் பிரின்சஸ் கப்பலில் உள்ள இந்தியர்கள் அனைவருக்கும் தேவையான உதவிகள் தூதரகம் மூலம் அளிக்கப்படுகிறது என்று மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் உறுதியளித்துள்ளார்.
ஹாங்காங் நகரத்தில் இருந்து கடந்த வாரம் டைமண்ட் பிரின்சஸ் கப்பல் ஜப்பானின் யோககாமா துறைமுகம் வந்தது. இந்தப் பயணிகள் கப்பலில் மொத்தம் 3,711 பயணிகள் இருக்கின்றனர். அவர்களில் பாதிக்கும் மேற்பட்டவர்கள் ஜப்பான் நாட்டைச் சேர்ந்தவர்கள். 400 பேர் அமெரிக்காவைச் சேர்ந்தவர்கள். மீதமுள்ளவர்கள் இந்தியா உள்பட பல்வேறு நாடுகளைச் சேர்ந்தவர்கள் உள்ளனர்.
சீனாவில் கரோனா வைரஸ் பரவி வரும் சூழலில் ஹாங்காங் நகரில் இருந்து இந்தக் கப்பல் புறப்பட்டது. இந்தக் கப்பலில் இருந்து ஹாங்காங் துறைமுகத்தில் இறக்கி மூதாட்டி ஒருவர் பின்னர் கரோனா வைரஸ் பாதிப்புக்குப் பலியானார்.
அதனால் டைமண்ட் பிரின்சஸ் கப்பலை முழுமையான மருத்துவக் கண்காணிப்புக்கு உட்படுத்த ஜப்பான் சுகாதாரத்துறை தீர்மானித்தது .அதனால் அந்தக் கப்பலை ஜப்பானில் உள்ள யோககாமா துறைமுகத்தில் நிறுத்த முடிவு செய்யப்பட்டது.
14 நாட்கள் வரை கடலிலேயே எல்லாப் பயணிகளுக்கும் மருத்துவக் கண்காணிப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள ஜப்பானியச் சுகாதாரத்துறை முடிவு செய்தது. கப்பலில் உள்ள பயணிகள் அனைவருக்கும் மருத்துவச் சோதனைகள் நடந்தன. இதுவரை 174 பேருக்கு கரோனா வைரஸ் பாதிப்பு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
குவாரண்டைன் காலம் முடிவதற்குள் இன்னும் நூற்றுக்கணக்கானவர்களுக்கு கரோனா வைரஸ் நோய்த்தொற்று ஏற்பட்டுவிடும் என்று பயணிகள் அஞ்சுகின்றனர்.
ஜப்பானியக் கப்பலில் சிக்கிக்கொண்ட தமிழகத்தைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் அங்குள்ள நிலைமை குறித்துப் பேசி வெளியிட்ட வீடியோ தமிழகத்தில் வைரலானது. இந்தக் கப்பலில் 138 இந்தியர்கள் உள்ளனர்.
இதுகுறித்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் நேற்று வெளியிட்ட அறிக்கையில், "ஜப்பானின் யோககாமா துறைமுகத்தில் நிறுத்தப்பட்டுள்ள டைமண்ட் பிரின்சஸ் கப்பலில் மதுரை மாவட்டம் நாகமலை புதுக்கோட்டையைச் சேர்ந்த அன்பரசன் என்பவர் இந்தக் கப்பலில் பணியாற்றி வருகிறார். அவர் வாட்ஸ் அப் மூலம் அனுப்பிய தகவலில், ‘டைமண்ட் பிரின்சஸ் கப்பலில் தமிழகத்தைச்சேர்ந்த 6 பேர் உட்பட 100 இந்தியர்கள் பணியாற்றுகின்றனர். இந்த 100 பேரையும் கப்பலில் இருந்து விடுவிக்க இந்திய அரசு உதவ வேண்டும்’ என்று வேண்டுகோள் விடுத்துள்ளார்.
ஜப்பான் கப்பலில் உள்ள தமிழர்கள் உள்ளிட்ட இந்தியப் பணியாளர்களைப் பாதுகாப்பாக அழைத்துவர வெளியுறவுத் துறை உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். அவர்கள் பாதுகாப்பாக நாடு திரும்புவதை இந்திய அரசு உறுதி செய்ய வேண்டும்" என வலியுறுத்தியிருந்தார்
இதையடுத்து, மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் ட்விட்டரில் உறுதியளித்துள்ளார். அவர் கூறுகையில் " டைமண்ட் பிரின்சஸ் கப்பலலி் இரு இந்தியர்களுக்கு கரோனோ வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. அந்தக் கப்பலில் இருக்கும் இந்தியர்களுக்குத் தேவையான அனைத்து உதவிகளையும் டோக்கியோவில் உள்ள இந்தியத் தூதரகம் செய்து வருகிறது. தற்போது, பயணிகளும், கப்பல் ஊழியர்களும் கண்காணிப்புக் காலத்தில் ஜப்பானியச் சுகாதாரத்துறையினர் வைத்துள்ளார்கள்" எனத் தெரிவித்துள்ளார்.
இதற்கு ஸ்டாலின் நன்றி தெரிவித்துள்ளார். அதில் " மரியாதைக்குரிய அமைச்சரின் தகவலுக்கு நன்றி. கப்பலில் சிக்கி இருக்கும் இந்தியர்களுக்கும், பயணிகளுக்கும், இந்திய தூதரகம் அனைத்து மருத்து, சட்ட உதவிகளை வழங்கும் என நம்புகிறேன். கப்பலில் சிக்கியவர்களின் குடும்பத்தினருக்கும் உரிய நேரத்தில் அவ்வப்போது தகவலை அளிப்பீர்கள் என நம்புகிறேன்" எனத் தெரிவித்துள்ளார்.