நாட்டின் மக்கள்தொகையை கட்டுப்படுத்த இரண்டு குழந்தைகள் மட்டுமே உள்ள குடும்பங்களுக்கு வருமான வரிச்சலுகை வழங்க வகை செய்யும் தனிநபர் மசோதாவை சிவசேனா கட்சியின் மாநிலங்களவை உறுப்பினர் தாக்கல் செய்துள்ளார்.
சிவசேனா கட்சியைச் சேர்ந்த மாநிலங்களவை உறுப்பினர் அனில் தேசாய், தனிநபர் மசோதா ஒன்றை தாக்கல் செய்துள்ளார். இந்திய அரசியலமைப்பு சட்டப்பிரிவு 47-ல் கூடுதலாக 47ஏ என்ற பிரிவை சேர்க்கக்கோரும் அந்த மசோதாவில் கூறியிருப்பதாவது:
அரசு சார்பில் சிறிய குடும்பங்களை ஊக்குவிக்கும் வகையில், இரண்டு குழந்தைகளுடன் நிறுத்திக்கொள்ளும் குடும்பங்களுக்கு வருமான வரி, வேலைவாய்ப்பு, கல்வி ஆகியவற்றில் சலுகைகள் வழங்க வேண்டும். மாறாக, இரண்டு குழந்தைகளுடன் நிறுத்திக்கொள்ளாத குடும்பங்களுக்கு இச்சலுகைகள் வழங்கக் கூடாது. இதன்மூலம், நாட்டின் மக்கள்தொகையை கட்டுக்குள் கொண்டு வர வேண்டும்.
அச்சுறுத்தும் வகையில் நாட்டின் மக்கள்தொகை அதிகரித்துவருவதே இத்தகைய மசோதா தாக்கல் செய்வதற்கான காரணம். மக்கள்தொகை அதிகரிப்பது நமது எதிர்கால சந்ததியினருக்கு பல்வேறு இன்னல்களை ஏற்படுத்தும். இதை சரிசெய்ய மத்திய, மாநில அரசுகள் திட்டங்களை தீட்ட வேண்டும். நம் இயற்கை வளம் அதிகளவில் சுரண்டப்படுகிறது. எந்த நாட்டிலும் மக்கள்தொகை வளர்ச்சி அந்நாட்டின் இயற்கை வளத்தோடு நேரடியாக தொடர்புடையது.
காற்று, நீர், நிலம், மரம் உள்ளிட்ட இயற்கை வளம் அளவுக்கதிகமான மக்கள்தொகை பெருக்கத்தால் அதிகளவில் சுரண்டப்படுகிறது. எனவே, நாட்டின் மக்கள்தொகைப் பெருக்கத்துக்கு உடனே முற்றுப்புள்ளி வைக்க வேண்டியது இன்றைய கட்டாயம். இந்த காரணங்களால் சிறிய குடும்பங்களுக்கு வருமான வரிச்சலுகைகள், சமூகநலத் திட்டங்கள் மற்றும் பள்ளிகளின் மாணவர் சேர்க்கையில் முன்னுரிமை வழங்குவது அவசியம். அதேநேரம், இரண்டு குழந்தைகளுடன் நிறுத்தாத குடும்பங்களுக்கு கூடுதல் வரிவிதிப்பு, சமூகநலத் திட்டங்களை வழங்காமல் நிறுத்திவைத்தல் மற்றும் சட்டப்பூர்வ தண்டனைகள் வழங்கவும் வகை செய்ய வேண்டும்.
இவ்வாறு அந்த மசோதாவில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த மசோதா மாநிலங்களவை தலைவரின் பரிசீலனைக்குப் பின்னர் விவாதத்திற்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.