இந்தியா

ஜிஎஸ்டி மசோதாவுக்கு காங்கிரஸ் எதிர்ப்பால் பொருளாதார வளர்ச்சி பாதிக்கிறது: மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி குற்றச்சாட்டு

பிடிஐ

சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) மசோதாவைக் கொண்டுவந்த காங்கிரஸ் கட்சி, இப்போது அதை எதிர்த்து வருவதாகவும் அக்கட்சியின் எதிர்ப்பு அரசியலால் நாட்டின் பொருளாதார வளர்ச்சி பாதிக்கப்படுவதாகவும் மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி குற்றம்சாட்டி உள்ளார்.

இப்போது நடைமுறையில் உள்ள உற்பத்தி மற்றும் மதிப்புக் கூட்டு வரி (வாட்) ஆகியவற் றுக்கு மாற்றாக ஒரே சீரான வரி விதிப்பு முறையை அடுத்த ஆண்டு ஏப்ரல் 1-ம் தேதி முதல் நடைமுறைப்படுத்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. அதன்படி ஜிஎஸ்டி சட்டத் திருத்த மசோதா வுக்கு மக்களவை ஒப்புதல் அளித்து விட்டது. ஆனால், மாநிலங்களவையில் ஆளும் கட்சிக்கு பெரும்பான்மை இல்லா ததால் அங்கு நிறைவேற்ற முடியாத சூழல் நிலவுகிறது. இதை வரும் 13-ம் தேதியுடன் முடிவடைய உள்ள நாடாளு மன்ற கூட்டத் தொடரிலேயே நிறைவேற்ற வேண்டி உள்ளது.

ஆனால் லலித் மோடி மற்றும் வியாபம் ஊழல் விவகாரங் களால் நாடாளுமன்றம் கடந்த 2 வாரங்களாக தொடர்ந்து முடக்கப்பட்டு வருகிறது.

இதுகுறித்து அருண் ஜேட்லி தனது பேஸ்புக்கில் கூறியிருப்பதாவது:

நாடாளுமன்றத்தை காங்கிரஸ் கட்சி தொடர்ந்து முடக்கி வருகிறது. இதனால் ஜிஎஸ்டி உட்பட முக்கியமான மசோதாக்களை நிறைவேற்ற முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

இந்த மசோதாவை காங்கிரஸ் கட்சிதான் கொண்டுவந்தது. இதில் தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு எந்த மாற்றமும் செய்யவில்லை. ஆனால் இப்போது காங்கிரஸ் கட்சி இந்த மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவிக்கிறது.

அக்கட்சி எதிர்ப்பு அரசியலில் ஈடுபடுவதால் நாட்டின் பொருளாதார வளர்ச்சி பாதிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

SCROLL FOR NEXT