வெளிநாட்டுத் தூதர்கள் 25 பேரைகொண்ட புதிய குழுவினர் ஜம்மு காஷ்மீரில் பயணம் செய் கின்றனர்.
ஜம்மு காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்தை மத்திய அரசு கடந்த ஆகஸ்ட் மாதம் விலக்கிக் கொண்டது. மேலும் அம்மாநிலம் 2 யூனியன் பிரதேசங்களாக பிரிக்கப்பட்டது. இந்த நடவடிக்கைகளை தொடர்ந்து அங்குள்ள கள நிலவரத்தை ஆய்வு செய்வதற்காக வெளிநாட்டுத் தூதர்கள் 15 பேர் கடந்த மாதம் இங்கு பயணம் செய்தனர்.
இந்நிலையில் வெளிநாட்டுத் தூதர்கள் 25 பேரை கொண்ட இரண்டாவது குழுவினர் 2 நாள் பயணமாக நேற்று காஷ்மீர் வந்தனர். ஆப்கானிஸ்தான், ஆஸ்திரியா, கனடா, டென்மார்க், ஐரோப்பிய யூனியன், பிரான்ஸ், ஜெர்மனி, இத்தாலி, கென்யா உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் தூதர்கள் இக்குழுவில் இடம்பெற்றுள்ளனர். இவர்கள் நேற்று காலை 11 மணிக்கு ஸ்ரீநகர் விமான நிலையம் வந்திறங்கினர். ஆனால் மோசமான வானிலை காரணமாக இவர்கள் திட்டமிட்டபடி, வடக்கு காஷ்மீரில் உள்ள பாரமுல்லா செல்ல முடியவில்லை. இதையடுத்து ஸ்ரீநகரில் உள்ள தால் ஏரியில் படகுப் பயணம் செய்து மகிழ்ந்தனர். காஷ்மீரில் இளைஞர்கள், அரசியல் தலைவர்கள், வணிகர்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரை இக்குழுவினர் சந்தித்து பேசுவார்கள் என நேற்று டெல்லியில் வெளியுறவு அமைச்சகம் தெரிவித்தது.