டெல்லி தேர்தலில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்ட வேட்பாளர்களில் 3 பேர் மட்டுமே டெபாசிட் தொகையை தக்க வைத்துக் கொண்டனர்.
கடந்த 8-ம்தேதி 70 உறுப்பினர்களைக் கொண்ட டெல்லி சட்டப்பேரவைக்கு தேர்தல் நடந்தது. இதற்கான வாக்கு எண்ணிக்கை நேற்று நடந்தது. மொத்தமுள்ள 70 தொகுதிகளில் ஆளும் ஆம் ஆத்மி கட்சி 62 தொகுதிகளைக் கைப்பற்றி அசுர பலத்துடன் அபார வெற்றி பெற்றுள்ளது. பாஜக 8 தொகுதிகளைக் கைப்பற்றியது. காங்கிரஸுக்கு ஓரிடம்கூட கிடைக்கவில்லை.
அர்விந்த் கேஜ்ரிவால் டெல்லி முதல்வராக மூன்றாவது முறையாகப் பதவியேற்க உள்ளார். பிப்ரவரி 16-ம் தேதி டெல்லி ராம்லீலா மைதானத்தில் பதவியேற்பு விழா நடைபெறுகிறது.
டெல்லி சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரஸ் தோல்வி கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. தோல்வி குறித்து மூத்த தலைவர்கள் பலர் தெரிவிக்கும் கருத்துக்கு கட்சியில் இருந்த எதிர்ப்பும் கிளம்பியுள்ளது.
முன்னாள் நிதியமைச்சரும் காங்கிரஸ் மூத்த தலைவருமான ப.சிதம்பரத்தின் ட்வீட் சொந்த கட்சிக்குள்ளேயே கடும் கண்டனத்தை ஏற்படுத்தியுள்ளது.
நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி மொத்தமுள்ள 70 தொகுதிகளில் 66 தொகுதிகளில் போட்டியிட்டது. கூட்டணிக் கட்சியான ராஷ்ட்ரீய ஜனதாதளம் 4 தொகுதிகளில் போட்டியிட்டது.
காங்கிரஸ் சார்பில் போட்டியிட்ட வேட்பாளர்களில் 3 பேர் மட்டுமே டெபாசிட் தொகையை தக்க வைத்துக் கொண்டுள்ளனர். அந்த கட்சியின் மூத்த தலைவர்கள் பலரும் டெபாசிட் இழந்துள்ளனர்.
அக்கட்சியின் சார்பில் போட்டியிட்ட முன்னாள் மத்திய அமைச்சர் கிருஷ்ணன் திரித் படேல் நகர் தொகுதியில் வெறும் 3,382 வாக்குகள் மட்டுமே பெற்று தோல்வியடைந்தார்.
முன்னாள் டெல்லி அமைச்சர் வாலியா, டெல்லி காங்கிரஸ் தலைவர் சுபாஷ் சோப்ராவின் மகன் ஷவானி சோப்ரா, டெல்லி முன்னாள் சபாநாயகர் யோகானந்த் சாஸ்திரியின் மகள் பிரியங்கா சிங், முன்னாள் கிரிக்கெட் வீரர் கீர்த்தி ஆசாத்தின் மனைவி பூனம் ஆசாத் வெறும் 2604 வாக்குகள் மட்டுமே பெற்று படுதோல்வியடைந்தார்.
ஆம் ஆத்மியில் இருந்து கட்சி மாறி காங்கிரஸ் சார்பில் போட்டியிட்ட அல்கா லம்பா, டெல்லி பல்கலைக்கழக முன்னாள் மாணவர் பேரவைத் தலைவர் ராக்கி துஷித் ஆகியோரும் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்டு டெபாசிட் இழந்தனர்.
அதேசமயம் பாஜக மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகள் சார்பில் போட்டியிட்ட யாரும் டெபாசிட் தொகையை இழக்கவில்லை. இந்த தேர்தலில் போட்டியிட்ட 500க்கும் மேற்பட்ட வேட்பாளர்கள் டெபாசிட் தொகையை இழந்துள்ளனர்.