இந்தியா

‘‘எனது மகள் மரணத்துக்கு நீதி வேண்டும்’’- கண்ணீர் விட்ட நிர்பயாவின் தாய்

செய்திப்பிரிவு

எனது மகள் மரணத்துக்கு நீதி வேண்டும் என நிர்பயாவின் தாய் ஆஷா தேவி நீதிமன்ற வளாகத்தில் கண்ணீர் விட்டார்.

டெல்லியில் கடந்த 2012-ம் ஆண்டு மருத்துவ மாணவி நிர்பயா பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் அக்‌சய் குமார் சிங், பவன் குப்தா, வினய் ஷர்மா, முகேஷ் சிங் ஆகிய 4 பேருக்கு டெல்லி விசாரணை நீதிமன்றம் தூக்கு தண்டனை வழங்கித் தீர்ப்பளித்தது

ஜனவரி 22-ம் தேதி, பிப்ரவரி 1-ம் தேதி என இருமுறை குற்றவாளிகள் 4 பேருக்கும் டெத் வாரண்ட் பிறப்பித்தது டெல்லி விசாரணை நீதிமன்றம். ஆனால், இருமுறையும் குற்றவாளிகள் குடியரசுத் தலைவரிடம் கருணை மனுத் தாக்கல் செய்ததால் தண்டனையை ஒத்திவைத்து டெல்லி நீதிமன்றம் உத்தரவிட்டது.

குற்றவாளிகளுக்குத் தண்டனை ஒத்தி வைக்கப்பட்டதை எதிர்த்தும், குற்றவாளிகளுக்கு தனித்தனியாகத் தூக்கு தண்டனையை நிறைவேற்ற வேண்டும் எனக் கோரியும் மத்திய அரசு சார்பில் டெல்லி உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது.

மேலும் டெல்லி அரசும் முறையீடு செய்திருந்தது. இந்த நடவடிக்கைகளால் நிர்பயா வழக்கின் குற்றவாளிகளுக்கு தூக்கு தண்டனையை நிறைவேற்றுவதில் தாமதம் நீடித்து வருகிறது. இந்தநிலையில் வழக்கு விசாரணை தொடர்பாக டெல்லி நீதிமன்றத்துக்கு இன்று வந்த நிர்பயாவின் தாய் ஆஷா தேவி இதுபற்றி கூறியதாவது:

‘‘எனது மகள் மரணத்துக்கு நீதி வேண்டும். ஆனால் இந்த வழக்கில் குற்றவாளிகள் கால தாமதம் செய்து தப்பிக்க முயலுகின்றனர். இதனை ஏன் நீதிமன்றங்கள் புரிந்து கொள்ளவில்லை என்ற ஆதங்கம் உள்ளது.

எப்போது எனக்கு நீதி கிடைக்கும். நானும் சாதாரண மனிதர் தான். எங்கள் உணர்வுகளையும் நீதிமன்றம் மதிக்க வேண்டும்.’’ எனக் கூறினார்.
அவர் பேசும்போதே கண்ணீ விட்டார். இதையடுத்து அவரது உறவினர்கள் அவரை சமாதானம் செய்தனர்.

SCROLL FOR NEXT