நாட்டில் பாதாளச் சாக்கடைகள் மற்றும் கழிவுநீர்த் தொட்டிகளைச் சுத்தம் செய்யும்போது உயிரிழந்த துப்புரவுத் தொழிலாளர்களின் எண்ணிக்கை 2018-ல் 68 ஆக இருந்தது. இது 2019-ல் 110 ஆக அதிகரித்துள்ளது என்று மத்திய அமைச்சர் ராம்தாஸ் அத்வாலே கூறியுள்ளார்.
நாடாளுமன்றத்தில் நேற்று (செவ்வாய்) எழுப்பப்பட்ட கேள்விக்குப் பதிலளிக்கும்போது அமைச்சர் ராம்தாஸ் அத்வாலே இவ்வாறு தெரிவித்தார்.
பாதாள சாக்கடைப் பணியில் மனித உயிரிழப்புச் சம்பவங்கள் குறித்து பாரதிய ஜனதா கட்சி எம்.பி.க்கள் அனில் ஃபிரோஜியா, மோகன்பாய் கல்யாஞ்சிபாய் குண்டாரியா மற்றும் லல்லு சிங் ஆகியோர் கேள்விகள் எழுப்பினர்.
மக்களவையில் எழுப்பப்பட்ட எம்.பி.க்களின் கேள்விகளுக்கு அமைச்சர் ராம்தாஸ் அத்வாலே நேற்று பதிலளித்துக் கூறியதாவது:
''2013-2014 முதல் 2020 ஜனவரி 31 வரை 13 மாநிலங்களில் நகராட்சிகள் மற்றும் கிராம பஞ்சாயத்துகளால் மொத்தம் 14,559 பேர் அடையாளம் காணப்பட்டனர். இது தவிர, 18 மாநிலங்களில் 194 மாவட்டங்களில் ஒரு தேசியக் கணக்கெடுப்பு நடத்தப்பட்டது, அதில் கடந்த மாதம் ஜனவரி 31 வரை 48,345 பேர் கையால் கழிவகற்றும் பணியாளர்கள் என்று அடையாளம் காணப்பட்டனர். ஆக மொத்தம் கையால் கழிவுகளை அகற்றும் தொழிலாளர்களின் எண்ணிக்கை 62,904 ஆக இருந்தது.
இந்தக் கணக்கெடுப்பில் 2019 இல் சாக்கடைகள், கழிவுநீர்த் தொட்டிகளைச் சுத்தம் செய்வதன் மூலம் 110 பேர் உயிரிழந்துள்ளனர் என்ற விவரமும் தெரியவந்துள்ளது.
ஆனால், சாக்கடை சுத்தப் பணிகளின்போது உயிரிழந்த நபர்களின் மரணம் குறித்து முறையான எந்தத் தகவலும் வரவில்லை. ஆனால், இதற்கான புள்ளிவிவரம் துப்புரவுப் பணியாளர்களுக்கான தேசிய ஆணையம் (National Commission for Safai Karamcharis) மூலம் பெறப்பட்டுள்ளது.
ஆணையக் குழுவின் அறிக்கைகளின்படி, கடந்த ஒவ்வொரு ஆண்டும் பாதாளச் சாக்கடையில் மேன் ஹோல் எனப்படும் ஆளிறங்கும் சாக்கடைக்குழியிலோ அல்லது கழிவுநீர்த் தொட்டியைச் சுத்தம் செய்யும் பணிகளில் விஷவாயு தாக்கியோ தொடர்ந்து மனித உயிரிழப்புகள் ஏற்பட்டு வருகின்றன. 2018-ல் 68, 2017-ல் 93, 2016-ல் 48, 2015-ல் 57 பேர் உயிரிழந்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. ஐந்து ஆண்டுகளில் கடந்த 2019-ல் மட்டும் மிக அதிக எண்ணிக்கையில், 110 துப்புரவுப் பணியாளர்கள் உயிரிழந்தனர்.
இந்த உயிரிழப்புகள் 18 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களிலிருந்து பதிவாகியுள்ளன, அதே நேரத்தில் 13 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் அவ்வாறு அசம்பாவிதங்கள் ஏதும் நடைபெறவில்லை என்பதற்கான அறிக்கைகளைச் சமர்ப்பித்துள்ளன.
உயிரிழப்புகள் இல்லை
அருணாச்சலப் பிரதேசம், அசாம், ஒடிசா, ஜார்க்கண்ட், மிசோரம், மணிப்பூர், நாகாலாந்து, சிக்கிம், தாத்ரா மற்றும் நகர் ஹவேலி, புதுச்சேரி, மேகாலயா, அந்தமான் மற்றும் நிகோபார் தீவுகள் 2015 முதல் 2019 வரை ''உயிரிழப்புகள் இல்லை'' என்ற அறிக்கைகளைச் சமர்ப்பித்தன.
ஆரோக்கியதிற்கு ஆபத்தான கிருமிகள் பரவக்கூடிய சுத்தமற்ற கழிவறைகளிலிருந்து வடிகாலில் வெளியேற்றப்படும் கழிவுகளால்தான் இத்தகைய மனித உயிரிழப்புகள் ஏற்படுகின்றன. பெரும்பாலும் இவை ஸ்வச் பாரத் திட்டத்தால் முன்னெடுக்கப்பட்டு தற்போது அத்தகைய தூய்மையற்ற பொது சுகாதாரத்திற்கு கேடு விளைவிக்கக்கூடிய கழிப்பறைகள் சுகாதாரமான இடங்களாக மாற்றப்படுகின்றன''.
இவ்வாறு அமைச்சர் ராம்தாஸ் அத்வாலே பதிலளித்தார்.