இந்தியா

முசாபர்பூர் காப்பக சிறுமிகள் பலாத்கார வழக்கு: முக்கிய குற்றவாளி பிரஜேஷ் உட்பட 12 பேருக்கு சாகும் வரை சிறை

செய்திப்பிரிவு

முசாபர்பூர் காப்பக சிறுமிகள் பாலியல் வன்கொடுமை வழக்கில் முக்கிய குற்றவாளி பிரஜேஷ் தாக்குர் மற்றும் 11 பேருக்கு டெல்லி நீதிமன்றம் நேற்று சாகும் வரை சிறை தண்டனை விதித்தது.

பிஹார் சட்டப்பேரவைத் தேர்தலில் பிஹார் மக்கள் கட்சி சார்பில் போட்டியிட்டு தோல்வி அடைந்தவர் பிரஜேஷ் தாக்குர். முசாபர்பூர் மாவட்டத்தில் அரசு நிதியுதவியுடன் ஆதரவற்றோர் காப்பகம் ஒன்றை நடத்தி வந்தார். இந்த காப்பகத்தில் 30-க்கும் மேற்பட்ட சிறுமிகள் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதாக புகார் எழுந்தது.

இது தொடர்பான வழக்கில் பிரஜேஷ் தாக்கூர், காப்பக ஊழியர்கள், பிஹார் சமூக நலத்துறை அதிகாரிகள் உள்ளிட்டோர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது. பின்னர் இந்த வழக்கு சிபிஐ-க்கு மாற்றப்பட்டது. மேலும், வழக்கு விசாரணை டெல்லி போக்ஸோ நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்டது. இந்த வழக்கில் 8 பெண்கள் உள்ளிட்ட 20 பேர் மீது குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டது. இவர்களில் பிரஜேஷ் தாக்குர் உள்ளிட்ட 19 பேர் குற்றவாளிகள் என நீதிமன்றம் கடந்த மாதம் 20-ம் தேதி அறிவித்தது.

இந்நிலையில் குற்றவாளிகளுக்கான தண்டனையை நீதிபதி சவுரப் குல்ஷ்ரஸ்தா நேற்று அறிவித்தார். இதில் முக்கிய குற்றவாளி பிரஜேஷ் தாக்குர் மற்றும் 11 பேருக்கு நீதிபதி வாழ்நாள் சிறை தண்டனை விதித்தார்.

இதுகுறித்து அரசு வழக்கறிஞர் அமித் ஜிண்டால் கூறும்போது, “இந்த வழக்கில் பிரஜேஷ் தாக்குர், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அதிகாரி திலீப் குமார் வர்மா, குழந்தைகள் நலக்குழு உறுப்பினர் விகாஸ் குமார் மற்றும் ரவி ரோஷன், விஜய் குமார் திவாரி, குட்டு படேல், கிஷன் குமார், ராமானுஜ் தாக்குர் உள்ளிட்ட 9 பேர் பாலியல் வன்கொடுமை மற்றும் பிற குற்றங்களுக்காக தண்டிக்கப்பட்டுள்ளனர். மேலும் ராமசங்கர் சிங், அஷ்வனி ஆகியோர் குற்றச்சதி மற்றும் குற்றத்துக்கு உடந்தையாக இருந்ததற்காக தண்டிக்கப்பட்டுள்ளனர். இவர்கள் 11 பேருக்கும் வாழ்நாள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

பெண் குற்றவாளிகள்

பெண் குற்றவாளிகளான ஷைஸ்தா பிரவீன், இந்துகுமாரி, மினு தேவி, மஞ்சு தேவி, சாந்தா தேவி, நேகா குமாரி, ஹேமா மாசிஹ், கிரண் குமாரி ஆகிய 8 பேர் குற்றச்சதி, குற்றத்துக்கு உடந்தை, குழந்தைகளை கொடுமைப்படுத்தியது, குற்றத்தை உயரதிகாரிகளிடம் தெரிவிக்காதது ஆகியவற்றுக்காக தண்டிக்கப்பட்டுள்ளனர்” என்றார்.

SCROLL FOR NEXT