இந்தியா

நாடாளுமன்ற துளிகள்: மாநிலங்களின் நிதி பயன்பாடு கண்காணிப்பு

செய்திப்பிரிவு

நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் உறுப்பினர்களின் கேள்விக்கு மத்திய அமைச்சர்கள் அளித்த பதில்களின் சுருக்கம் வருமாறு:

மாநிலங்களில் நிதி பயன்பாடு கண்காணிப்பு

மத்திய பஞ்சாயத்து ராஜ் துறை அமைச்சர் நரேந்திர சிங் தோமர்:

'ராஷ்ட்ரீய கிராம ஸ்வராஜ் அபியான்' திட்டத்தின் கீழ் பல்வேறு மாநிலங்களுக்கு நிதி வழங்கப்பட்டுள்ளது. அதாவது, கிராமங்களை மேம்படுத்துவதற்காக சம்பந்தப்பட்ட மாநிலங்கள் வகுத்துள்ள திட்டங்களை ஆய்வு செய்து, அதற்கான மத்திய அரசின் நிதிப் பங்களிப்பு வழங்கப்பட்டிருக்கிறது.

இந்த நிதி எவ்வாறு பயன்படுத்தப்படுகிறது என்பது குறித்து மத்திய அரசு தொடர்ந்து கண்காணித்து வருகிறது. சம்பந்தப்பட்ட மாநில அரசு அதிகாரிகளுடன் ஆலோசனைக் கூட்டங்களை நடத்தி இந்த விஷயங்களை கேட்டறிந்து வருகிறோம். இவ்வாறு நரேந்திர சிங் தோமர் தெரிவித்தார்.

காஷ்மீர் செல்ல யாருக்கும் தடை இல்லை

மத்திய உள்துறை இணையமைச்சர் ஜி.கிஷண் ரெட்டி:

ஜம்மு-காஷ்மீர் யூனியன் பிரதேசத்துக்கு செல்ல இந்தியக் குடிமக்கள் யாருக்கும் தடை விதிக்கப்படவில்லை. இரண்டு தினங்களுக்கு முன்பு கூட 15 வெளிநாடுகளைச் சேர்ந்த தூதர்கள், ஜம்மு-காஷ்மீருக்கு சென்று அங்குள்ள கள நிலவரங்களை பார்வையிட்டனர்.

இந்தப் பயணத்தின்போது, அனைத்து தரப்பு மக்களை சந்தித்து அவர்கள் பேச்சுவார்த்தை நடத்தினர். காஷ்மீரை பார்வையிட அனுமதியளித்ததற்காக இந்திய அரசுக்கு நன்றி தெரிவித்த அவர்கள், அங்கு சுமூகமான சூழலை உருவாக்கியதற்காக பாராட்டும் தெரிவித்தனர். இவ்வாறு கிஷண் ரெட்டி கூறினார்.

மீன்பிடி சட்டத்தை அமல்படுத்த பரிசீலனை

மத்திய மீன் வளத் துறை இணையமைச்சர் பி.சி. சாரங்கி:

கடந்த 2017-ம் ஆண்டில், தேசிய மீன் பிடிப்புக் கொள்கை மீது சில பரிந்துரைகள் வழங்கப்பட்டிருந்தன. அதன்படி, இந்தியா முழுவதும் ஒரே மாதிரியான மீன்பிடிச் சட்டத்தை அமல்படுத்த பரிந்துரைக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக மத்திய அரசு தீவிரமாக பரிசீலித்து வருகிறது.

அதேபோல், மீன் ஏற்றுமதிக்கென பிரத்யேக தளத்தை உருவாக்கித் தருவது குறித்தும் பரிசீலிக்கப்பட்டு வருகிறது. இதன் மூலம், மீன் ஏற்றுமதி தொழில்களில் இருக்கும் இடைத்தரகர்கள் முழுமையாக ஒழிக்கப்படுவார்கள். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

காவல் துறையை நவீனப்படுத்த நடவடிக்கை

மத்திய உள்துறை இணையமைச்சர் ஜி.கிஷண் ரெட்டி:

காவல்துறை, சட்டம் ஒழுங்கு ஆகியவை மாநிலப் பட்டியலின் கீழ் வருகின்றன. எனினும், காவல்துறையை நவீனப்படுத்துவதற்காக மாநில அரசுகளுக்கு உதவ மத்திய அரசு திட்டம் கொண்டு வந்துள்ளது.

அதன்படி, குற்றச் சம்பவங்களைக் குறைப்பதற்காக வடிவமைக்கப்பட்டுள்ள பிரத்யேக கருவிகளை கையாள காவல்துறையினருக்கு பயிற்சி வழங்குவது, மேம்பட்ட தகவல் தொடர்பு, காவல்துறைக்கான கட்டிடங்கள் உள்ளிட்ட நடவடிக்கைகளுக்கு மத்திய அரசின் பங்களிப்பு வழங்கப்படும். மாநில அரசுகளின் கோரிக்கைகளுக்கு ஏற்ப இதற்கு நிதி வழங்கப்படும். இவ்வாறு அவர் தெரிவித்தார். 

SCROLL FOR NEXT