இந்தியா

முதல்வர் வேட்பாளரை அறிவிக்காததால் டெல்லி தேர்தலில் பாஜகவுக்கு பின்னடைவா?

செய்திப்பிரிவு

பல்வேறு மாநிலங்களில் தனது முதல்வர் வேட்பாளரை முன்னிறுத்தி பாஜக கடந்த காலங்களில் வெற்றி கண்டுள்ளது. இந்த நிலைமை, கடந்த 2014 மக்களவைத் தேர்தலில் வீசிய நரேந்திர மோடி அலைக்கு பின் மாறியது. உத்தரபிரதேசம், உத்தராகண்ட், அசாம், மணிப்பூர், குஜராத் ஆகிய மாநிலங்களில் பாஜக சார்பில் முதல்வர் வேட்பாளர் அறிவிக்கப்படவில்லை. மாறாக, அங்கு பிரதமர் மோடியின் சாதனைகளை முன்னிறுத்தி பாஜக வெற்றி பெற்றது.

இதேபாணியில், டெல்லி சட்டப்பேரவைத் தேர்தலிலும் முதல்வர் வேட்பாளரை நிறுத்தாமலேயே, பாஜக களம் கண்டது. மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவும் இந்தமுறை டெல்லியின் வீதிகளுக்கு சென்று வாக்குகள் சேரித்தார்.

இதனால், டெல்லி தேர்தலில் பாஜக வெற்றி பெற்றால் அமித் ஷா முதல்வராக்கப்படலாம் எனவும் பேச்சு எழுந்தது. ஆனால், இந்தக் கருத்தை கூட பாஜக அங்கீகரிக்கவோ மறுக்கவோ இல்லை. இது பாஜகவின் குறைபாடாகவே அக்கட்சியின் டெல்லிவாசிகளால் பார்க்கப்பட்டது.

இதனிடையே, பிஹார் மற்றும் உத்தரபிரதேசத்தின் கிழக்குப் பகுதியினர் சுமார் 35 சதவிகிதம் இருப்பதை நம்பி மனோஜ் திவாரியை டெல்லி மாநிலத் தலைவராக்கியது பாஜக. இருந்தபோதிலும், இவரது பல பேச்சுக்கள் சர்ச்சையானதால், அவருக்கு மக்கள் மத்தியில் செல்வாக்கு காணப்படவில்லை. எனவே, மனோஜ் திவாரியையும் முதல்வர் வேட்பாளராக அறிவிக்க முடியவில்லை.

அடுத்து, பாஜகவைச் சேர்ந்த டெல்லி முன்னாள் முதல்வர் சாஹிப்சிங் வர்மாவின் மகன் பர்வேஷ் வர்மாவை முன்னிறுத்தவும் பாஜக முயற்சித்தது. இவரும் தேர்தல் பிரச்சாரத்தின் போது பல சர்ச்சை கருத்துகளை கூறி அதற்கான வாய்ப்பை இழந்தார். இந்தச் சூழலில், பாஜகவிடம் டெல்லியின் முக்கிய தலைவராக மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை அமைச்சரான ஹர்ஷவர்தன் இருந்தார்.

ஆனால், அவரை முதல்வர் வேட்பாளராக பாஜக முன்னிறுத்தவில்லை.

இதேபோன்ற வாய்ப்பை 2013-ம் ஆண்டின் சட்டப்பேரவை தேர்தலிலும் ஹர்ஷவர்தன் இழக்க வேண்டியதாயிற்று. இதனிடையே, 2015 பேரவைத் தேர்தலில் ஓய்வுபெற்ற ஐபிஎஸ் அதிகாரியான கிரண்பேடியை முதல்வர் வேட்பாளராக்கியது பாஜக. ஆனால், அதுவும் பலனளிக்கவில்லை.

SCROLL FOR NEXT