திருப்பதி ஏழுமலையான் கோயில் பிரசாத விநியோகத்தில் புதிய கட்டுப்பாடுகள் வரும் மே 1-ம் தேதி முதல் அமலுக்கு வர உள்ளது. அதன்படி, பெரிய லட்டு என்றழைக்கப்படும் கல்யாண உற்சவ லட்டு பிரசாதம் உட்பட பல பிரசாதங்களின் விலை உயர்த்தப்பட உள்ளது.
திருப்பதியில் பக்தர்கள் தங்கும் அறைகளின் வாடகையை திருமலை திருப்பதி தேவஸ்தானம் கடந்த 4 மாதங்களுக்கு முன்பு உயர்த்தியது. இத்துடன் வசூலிக்கப்படும் ஜிஎஸ்டியும் அதிகரித்துள்ளது. இது பக்தர்களுக்கு அதிர்ச்சி அளித்தாலும் வேறு வழியின்றி புதிய விடுதி வாடகையை வழங்கி வருகின்றனர். ஆனாலும் சனி, ஞாயிறு மற்றும் இதர விடுமுறை நாட்களில் பக்தர்கள் அதிகம் வருவதால், தங்கும் அறைகள் கிடைக்காமல் அவதிப்பட்டு வருகின்றனர்.
இதைத் தொடர்ந்து, விஐபி பிரேக் தரிசன கட்டணத்திலும் புதிய திட்டத்தை தேவஸ்தானம் கொண்டு வந்தது. விஐபி பிரேக் தரிசன திட்டத்தின் கீழ் சிபாரிசு கடிதங்கள் மூலம் ரூ.500 கட்டணம் செலுத்தி சுவாமியை காலை 5 மணி முதல் 8 மணி வரை தரிசிக்கின்றனர். சிபாரிசு கடிதம் இல்லாமல் இதே விஐபி பிரேக் தரிசனம் வாயிலாக சுவாமியை தரிசிக்க ஆசைப்படும் எளிய பக்தர்கள், ரூ.500 உடன் கூடுதலாக ரூ.10,000 என மொத்தம் ரூ.10,500-ஐ ‘வாணி அறக்கட்டளை’ என்ற பெயரில் கட்டணம் செலுத்தி சுவாமியை தரிசித்து வருகின்றனர்.
மானிய விலை லட்டு ரத்து
இதைத் தொடர்ந்து, நடைபயணமாக மலையேறி வரும் பக்தர்களுக்கு திவ்ய தரிசனம் மூலம் தேவஸ்தானம் இலவசமாக தரிசன ஏற்பாடுகளை செய்து வருகிறது. இவர்களுக்கு இலவசமாக தலா ஒரு லட்டும், மானிய விலையில் கூடுதலாக 4 லட்டுகளும் வழங்கி வந்தது.
தற்போது, இந்த மானிய விலை லட்டுகளை முழுவதுமாக தேவஸ்தானம் ரத்து செய்து விட்டது. மேலும், திருமலைக்கு வரும் அனைத்து பக்தர்களுக்கும் இலவசமாக ஒரு லட்டு வழங்கி வருகிறது. மற்றபடி, இதுவரை ரூ.25-க்கு விற்று வந்த ஒரு லட்டு பிரசாதத்தை, ரூ.50ஆக உயர்த்தி உள்ளது.
அடுத்ததாக, தற்போது பெரிய லட்டு எனப்படும் கல்யாண உற்சவலட்டு, சேவையின் போது இலவசமாக வழங்கப்படுகிறது. இதை வரும் மே 1-ம் தேதி முதல் ரத்து செய்ய தேவஸ்தானம் திட்டமிட்டுள்ளது.
வடை விலை ரூ.100
பெரிய லட்டு தேவைப்படும் பக்தர்கள் கூடுதலாக பணம் செலுத்தி பெற்றுக்கொள்ளலாம் என அறிவித்துள்ளது. சமீபத்தில்தான் பெரியலட்டு விலை ரூ.100-லிருந்து 200 ஆகவும் வடையின் விலையைரூ.50-லிருந்து ரூ.100 ஆகவும் உயர்த்தப்பட்டது. இது பக்தர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
ஏழுமலையானுக்கு தினசரி, வாராந்தர, வருடாந்திர சேவைகள் நடைபெற்று வருகின்றன. இதில் தினசரி சேவைகளான சுப்ரபாதம், தோமாலை, அர்ச்சனை, ஊஞ்சல் சேவை, ஆர்ஜித பிரம்மோற்சவம், வசந்தோற்சவம், சகஸ்ர தீப அலங்கார சேவைகளுக்கு ஏழுமலையானின் தரிசனத்துடன் இலவசமாக 2 பெரிய லட்டு வழங்கப்படுகிறது.
மேலும், திருக்கல்யாண சேவைக்கு 2 பெரிய லட்டுகள், 2 வடைகள், 5 சிறிய லட்டுகளும் வழங்கப்படுகின்றன. இதுவே வாராந்திரசேவைகளான விசேஷ பூஜைக்குஒரு பெரிய லட்டு, ஒரு வடை, அஷ்டதள பாத பத்மாராதனை சேவைக்கு 2 பெரிய லட்டு,2 வடைகள், சகஸ்ர கலசாபிஷேகத்துக்கு 2 பெரிய லட்டு, 2வடைகள், 2 அப்பம், திருப்பாவாடை சேவைக்கு 1 பெரிய லட்டு, 1 வடை, 1 ஜிலேபி, 1 முறுக்கு, அபிஷேகம் மற்றும் வஸ்திர சேவைக்கு 2 பெரிய லட்டு, 2 வடைகள், நிஜபாத சேவைக்கு 2 பெரிய லட்டும் இலவசமாக வழங்கப்பட்டு வருகிறது.
இவை வரும் மே 1-ம் தேதிமுதல் முழுவதும் ரத்து செய்யப்படுகிறது. இதற்கு பதில், ஒருசாதாரண லட்டு மட்டுமே இலவசமாக வழங்க தேவஸ்தானம் திட்டமிட்டுள்ளது. இந்த பிரசாதங்கள் தேவைப்படும் பக்தர்கள் கூடுதலாக பணம் செலுத்தி பெற்று கொள்ளலாம் என கூறப்படுகிறது. இது பக்தர்களிடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.
சுவாமி சேவையில் பங்கேற்கும் பக்தர்களுக்கு தேவஸ்தானம் இதுவரை கொடுத்து வந்த கவுரவமே பிரசாதங்களாகும். இதை ஏன் தேவஸ்தானம் ரத்து செய்ய வேண்டும் ? இவர்களுக்கு பணம் தட்டுப்பாடு இருந்தால், சேவையின் கட்டண விலையை உயர்த்திக் கொள்ளட்டும் என பக்தர்களில் சிலர் தெரிவித்துள்ளனர். ஆனால்,பெரும்பாலான பக்தர்கள், பிரசாதங்கள் ரத்து செய்யப்படுவதை விரும்பவில்லை.