இலங்கை பிரதமர் மகிந்த ராஜபக்ச நேற்று முன்தினம் மாலை தனது மகன் யோஷிதா ராஜபக்ச, இலங்கை அமைச்சர் ஆறுமுகம் தொண்டமான் மற்றும் சிலருடன் திருப்பதிக்கு வந்தார்.
அன்று இரவு திருமலையில் தங்கிய இலங்கை பிரதமர், நேற்று காலை விஐபி பிரேக் சமயத்தில் கோயிலுக்கு சென்றார். அவருக்கு பூரண கும்ப மரியாதை அளித்த தேவஸ்தானத்தினர், ஏழு மலையானை தரிசிக்க ஏற்பாடுகள் செய்தனர். பின்னர், இலங்கை பிரதமருக்கு தேவஸ்தானம் சார்பில் தீர்த்த பிரசாதங்கள் வழங்கி கவுரவிக்கப்பட்டது.
அதன் பின்னர், கோயிலில் இருந்து வெளியே வந்த அவர் பேட்டரி கார் மூலம் சிறிது தூரம் சென்று, காரில் புறப்பட்டு தங்கும் விடுதிக்கு சென்றார். சிறிது நேரம் கழித்து அங்கிருந்து மீண்டும் காரில் புறப்பட்டு ரேணிகுண்டா விமான நிலையம் சென்றார். அவரை மாநில அமைச்சர் கள், மாவட்ட ஆட்சியர், எஸ்பி ஆகியோர் வழியனுப்பி வைத்தனர்.
முகம் சுளித்த பக்தர்கள்
ஏழுமலையான் கோயிலுக்குள் செல்லும் யாரும் காலில் சாக்ஸ் அணிவது கிடையாது. ஆனால் இலங்கை பிரதமர் ராஜபக்ச மற்றும் அமைச்சர் ஆறுமுகம் தொண்டமான் ஆகிய இருவரும் கோயில் சாம்பிரதாயங்களை மீறி காலில் சாக்ஸுடன் கோயிலுக்குள் சென்று சுவாமியை தரிசித்தனர். இதனை கண்டும், காணாதது போன்று, தேவஸ்தான அதிகாரிகள், மற்றும் உடன் சென்ற பாதுகாப்பு அதிகாரிகள் ராஜபக்சவுடன் சென்று சுவாமியை தரிசித்தனர்.
ஆனால், காலில் சாக்ஸ் அணிந்தபடி கோயிலுக்கு வெளியே வந்தராஜபக்சவை கண்ட அங்கிருந்தபக்தர்கள் முகம் சுளித்தனர்.காலில் சாக்ஸுடன் ஏழு மலையானை ராஜபக்ச தரிசித்ததால் இது தற்போது புதிய விவாதத்தை கிளப்பி உள்ளது.