இந்தியா

எஸ்சி, எஸ்டி சட்டம் 2018 செல்லும்: உச்ச நீதிமன்றம் தீர்ப்பு

செய்திப்பிரிவு

எஸ்சி, எஸ்டி வன்கொடுமை தடுப்பு சட்டம் தவறாக பயன்படுத்தப்படுவதாகக் கூறி தாக்கல் செய்யப்பட்ட ஒரு வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், கடந்த 2018-ம் ஆண்டு தீர்ப்பு வழங்கியது. அதில், எஸ்சி, எஸ்டி வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் அரசு அதிகாரிகள் மீது புகார் கொடுத்தால், விசாரணையின்றி அவர்களை கைது செய்யக் கூடாது என கூறப்பட்டிருந்தது.

இந்தத் தீர்ப்பை எதிர்த்து நாடு முழுவதும் தலித் அமைப்புகள் சார்பில் போராட்டம் நடைபெற்றது. இதில் வன்முறையும் ஏற்பட்டது. இந்த தீர்ப்பு எஸ்சி, எஸ்டி சட்டத்தை நீர்த்துப் போகச் செய்யும் என அவர்கள் குற்றம் சாட்டினர்.

இதையடுத்து, மத்திய அரசு எஸ்சி, எஸ்டி சட்டத்தில் திருத்தம் (2018) செய்தது. இதில், இந்த சட்டத்தில் முன்பு இருந்த அம்சங்கள் சேர்க்கப்பட்டன. அதாவது, இந்த சட்டத்தின் கீழ் புகார் கொடுத்தால், விசாரணையின்றி கைது செய்ய முடியும்.

இந்த சட்டத்தை எதிர்த்து பல்வேறு பொதுநல மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இந்த மனுக்களை நீதிபதி அருண் மிஸ்ரா தலைமையிலான அமர்வு விசாரித்து வந்தது. விசாரணை முடிந்ததையடுத்து தீர்ப்பு ஒத்தி வைக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், மத்திய அரசின் எஸ்சி, எஸ்டி திருத்த சட்டம் செல்லும் என உச்ச நீதிமன்றம் நேற்று தீர்ப்பு வழங்கியது. இந்த சட்டத்தின் கீழ் புகார் அளித்தால், சம்பந்தப்பட்டவர் மீது வழக்கு பதிவு செய்வதற்கு முன்பு முதற்கட்ட விசாரணை நடத்தவோ, போலீஸ் அதிகாரியின் அனுமதி பெறவோ அவசியம் இல்லை என இந்த சட்டத்தில் கூறப்பட்டுள்ளது. - பிடிஐ

SCROLL FOR NEXT