பிப்ரவரி 8ம் தேதி நடந்து முடிந்த டெல்லி சட்டப்பேரவை தேர்தல் வாக்கு எண்ணிக்கை செவ்வாயக்கிழமை (11-2-2020) நடைபெறுவதால் தலைநகர் டெல்லியில் பாதுகாப்பு ஏற்பாடுகள் வலுவாக மேற்கொள்ளப்பட்டுள்ளன.
70 உறுப்பினர்கள் கொண்ட சட்டமன்றத்துக்கான தேர்தல் வாக்குப்பதிவு முடிந்த பிறகான கருத்துக் கணிப்பில் ஆம் ஆத்மி, கேஜ்ரிவாலுக்குச் சாதகமாக முடிவுகள் வெளியானதால் மக்களிடையே பாஜகவா? ஆம் ஆத்மியா என்ற சுவாரஸ்யம் மிகுந்துள்ளது.
ஆம் ஆத்மிக்கும் பாஜகவுக்குமான போட்டியாகவே பார்க்கப்படும் இந்தத் தேர்தலின் போது இருதரப்பிலும் சூடான பிரச்சாரங்கள் மேற்கொள்ளப்பட்டன. பாஜகவின் வழக்கமான தேர்தல் பிரச்சாரத்திலிருந்து ஆம் ஆத்மி அந்தக் கட்சியை திருப்பி வளர்ச்சி பற்றி பேச வைத்தத என்று கேஜ்ரிவால் ஒரு ஆங்கில ஊடக பேட்டி ஒன்றில் தெரிவித்தார்.
மொத்தம் 593 ஆடவர் வேட்பாளர்கள், 93 மகளிர் வேட்பாளர்களுடன் 672 வேட்பாளர்களின் தலைவிதியை மக்கள் எப்படி தீர்மானித்திருக்கிறார்கள் என்பது நாளை தெரிந்து விடும்.
வாக்களிப்பு முடிந்து 24 மணி நேரம் கழித்து தேர்தல் ஆணையம் மொத்த வாக்குப்பதிவு 62.59% என்று அறிவித்தது. 2015-ஐ வைட 5% வாக்குப்பதிவு குறைவாக பதிவானது.
11 மாவட்டங்களில் 21 இடங்களில் வாக்குகள் எண்ணப்படுகின்றன, இதற்காக பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இதற்காக 33 தேர்தல் பார்வையாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
டெல்லி தேர்தலில் சுமார் 1.47 கோடி மக்கள் வாக்களிக்கத் தகுதியானவர்கள், இதில் 2,32,815 பேர் 18-19 வயதுடையவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.