மகாராஷ்டிராவில் இளைஞர் ஒருவரால் ஆசிட் வீசி, தீ வைக்கப்பட்டதால் உயிருக்குப் போராடிய 25 வயதுப் பெண் விரிவுரையாளர் சிகிச்சை பலனின்றி இன்று உயிரிழந்தார்.
பெண் விரிவுரையாளர் அங்கிதா மரணத்தைத் தொடர்ந்து எந்தவொரு சட்டம் ஒழுங்கு பிரச்சினையும் ஏற்படாமல் இருக்க ஹிங்கங்காட்டில் கடும் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
வார்தா மாவட்டத்தில் கல்லூரி ஒன்றில் விரிவுரையாளராகப் பணியாற்றி வந்தவர் ஹிங்காங்காட்டைச் சேர்ந்த அங்கிதா பிசுடே (25). இவர் கடந்த திங்கள் அன்று கல்லூரிக்குச் சென்று கொண்டிருந்தார். அப்போது வழியில் விகேஷ் நாக்ரலே (27) என்பவர் அங்கிதா மீது ஆசிட் வீசி, தீ வைத்ததாக காவல்துறை தெரிவித்துள்ளது.
இதனையடுத்து,''பெண் விரிவுரையாளர் மீது ஆசிட் வீசி தீ வைத்த நபருக்கு மரண தண்டனை விதிக்க வேண்டும்'' என்று கோரி அதே நாளில் வார்தாவில் உள்ள ஹிங்காங்கட் மற்றும் சமுத்திரபூரைச் சேர்ந்த பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கடந்த வியாழக்கிழமை, பெண் விரிவுரையாளருக்கு நீதி கேட்டு கல்லூரி மாணவிகள் நடத்திய போராட்டம்
மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தாலும் மோசமான நிலை தொடர்ந்ததை அடுத்து வார்தா நகரத்தில் கடந்த வியாழக்கிழமை அங்கிதாவுக்கு நீதி கோரி பிரம்மாண்ட பேரணி நடைபெற்றது. இதில் 3,500 க்கும் மேற்பட்ட பெண்கள் மற்றும் கல்லூரி மாணவிகள் பங்கேற்றனர். கடையடைப்புக்கும் அவர்கள் அழைப்பு விடுத்தனர். பேரணியின்போது, ''குற்றவாளியை எங்களிடம் ஒப்படையுங்கள்'' என்று அவர்கள் கோஷமிட்டனர்.
இந்த வழக்கை துணை காவல் கண்காணிப்பாளர் துருபி ஜாதவ் தலைமையிலான சிறப்புக் குழு விசாரிக்கும் என்று வார்தா போலீஸார் புதன்கிழமை தெரிவித்தனர்.
நாக்ரலே என்பவர் சில காலமாகவே அங்கிதாவைப் பின்தொடர்ந்து துன்புறுத்தி வந்தார் என்று அவரின் உறவினர்கள் கூறியுள்ளனர். இச்சம்பவம் நடந்த சில மணிநேரங்களிலேயே நாக்ரலே கைது செய்யப்பட்டார். அவர் மீது 307 (கொலை முயற்சி) மற்றும் 326-ஏ (ஆசிட் பயன்படுத்துவதன் மூலம் கடுமையான காயத்தை ஏற்படுத்தக்கூடிய குற்றம்) ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
காலை 6.55க்கு உயிர் பிரிந்தது
இதுகுறித்து இன்று ஹிங்காங்கட்டின் காவல்துறை ஆய்வாளர் சத்வீவர் பாண்டிவார் கூறுகையில், '' விரிவுரையாளர் அங்கிதா வார்தாவிலிருந்து 75 கி.மீ. தொலைவில் அமைந்துள்ள ஆரஞ்சு நகர மருத்துவமனை மற்றும் ஆராய்ச்சி மையத்தில் கடந்த ஒருவார காலமாக சிகிச்சை பெற்று வந்தார். அவரைக் குணப்படுத்த தீவிர சிகிச்சை மேற்கொள்ளப்பட்ட நிலையிலும் அவரது நிலை மிகவும் மோசமாகவே இருந்தது. இன்று காலை 6.55 மணிக்கு அங்கிதா இறந்துவிட்டதாக மருத்துவர்கள் அறிவித்தனர்'' என்றார்.
இதுகுறித்து வார்தாவை அடுத்த ஆரஞ்சு சிடி மருத்துவமனை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது:
''அங்கிதாவுக்கு உச்சந்தலை, முகம், வலது மேல் மூட்டு, இடது கை, மேல் முதுகு, கழுத்து மற்றும் கண்களில் ஆழமான தீக்காயங்கள் ஏற்பட்டுள்ளன. ஆழ்ந்த தோல் தீக்காயங்கள் மட்டுமின்றி கடுமையான உள்ளிறங்கிய காயங்களால் சுவாசக் கோளாறு மற்றும் தொடர்புடைய சிக்கல்களும் ஏற்பட்டன.
இன்று அதிகாலை 4 மணியளவில், அவரது ஆக்ஸிஜன் அளவு கடும் மாறுபாடுகளைக் கொண்டிருந்தது. இதனால் வென்டிலேட்டரின் பயன்பாடும் மோசமாகத் தொடங்கியது. இதனால் சிறுநீர் வெளியீடு குறைதல் மற்றும் ரத்த அழுத்தம் குறைதல் ஆகியவையும் சேர்ந்துகொண்டதால் உடனடி புத்துயிர் நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக, ரத்த அழுத்தத்தைப் பராமரிக்க மருந்துகள் அதிகரிக்கப்பட்டன
ரத்தத்தில் ஆக்ஸிஜன் அளவை மேம்படுத்த அனைத்து சாத்தியமான நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டன. ஆனால் நோயாளி உச்சபட்ச நெருக்கடியில் போராடிக் கொண்டிருந்தார்.
இதனால் அங்கிதா, மிகவும் அவதியுற்று வந்தார். இன்று காலையில் அவர் உயிர் பிரிந்தது.
"காலை 6.30 மணியளவில், அவருக்கு மெதுவான இதயத்துடிப்பு இருந்தது. அதன் தொடர்ச்சியாக நீண்டகால இருதய நுரையீரல் நோய் புத்துயிர் பெற்றது. காலை 6.55 மணிக்கு இறந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டது. இத்தகைய மரணம் “செப்டிசெமிக் அதிர்ச்சி” (septicemic shock) என்றுகூறப்படுகிறது''.
இவ்வாறு ஆரஞ்சு சிடி மருத்துவமனை செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.