உமர் அப்துல்லா, மெகபூபா முப்தி : கோப்புப்படம் 
இந்தியா

உமர் அப்துல்லா, மெகபூபா முப்தி மீது 'பிஎஸ்ஏ சட்டம்' பாயக் காரணம் என்ன?

பிடிஐ

ஜம்மு காஷ்மீர் முன்னாள் முதல்வர்கள் தேசியவாத கட்சியின் தலைவர் உமர் அப்துல்லா, மக்கள் ஜனநாயகக் கட்சியின் தலைவர் மெகபூபா முப்தி ஆகியோர் மீது பொதுப்பாதுகாப்புச் சட்டத்தின்(பிஎஸ்ஏ) கீழ் காஷ்மீர் நிர்வாகம் நடவடிக்கை எடுத்ததற்கான காரணம் வெளியாகியுள்ளது.

ஜம்மு காஷ்மீர் மாநிலத்துக்கான சிறப்பு அந்தஸ்து 370-வது பிரிவைக் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் 5-ம் தேதி மத்திய அரசு ரத்து செய்தது. இதைத் தொடர்ந்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அந்த மாநிலத்தின் முன்னாள் முதல்வரும், தேசிய மாநாட்டுக் கட்சியின் தலைவரும் பரூக் அப்துல்லாவின் மகனும் முன்னாள் முதல்வருமான உமர் அப்துல்லா, மக்கள் ஜனநாயகக் கட்சியின் தலைவர் மெகபூபா முப்தி ஆகியோரை மாநில அரசு வீட்டுக் காவலில் வைத்தது.

கடந்த டிசம்பர் மாதத்தோடு பரூக் அப்துல்லாவுக்கு முதல் 3 மாதக் காவல் முடிந்த நிலையில், அடுத்த 3 மாதங்களுக்குக் காவலை நீட்டித்து மாநில நிர்வாகம் உத்தரவிட்டது. இதற்கிடையே முன்னாள் முதல்வர்கள் மெகபூபா முப்தி, உமர் அப்துல்லா ஆகியோர் மீது பொதுப்பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகக் காஷ்மீர் நிர்வாகம் அறிவித்தது. இந்த மூன்று முன்னாள் முதல்வர்களும் கடந்த 6 மாதங்களாக தடுப்புக்காவலில் வீட்டுச்சிறையில் வைக்கப்பட்டுள்ளனர்.

பொதுப்பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் ஒருவர் கைது செய்யப்பட்டால், விசாரணையின்றி ஒரு ஆண்டுவரை காவலில் வைத்திருக்க முடியும்.

இதற்கிடையே உமர் அப்துல்லா, மற்றும் மெகபூபா முப்தி ஆகியோர் மீது பொதுப்பாதுகாப்புச் சட்டம் பாய்ந்தது என்பதற்கான காரணம் வெளியாகியுள்ளது.

இதில் தேசியவாத கட்சித் தலைவர் உமர் அப்துல்லா சமூகவலைத்தளத்தில் மிகவும் சுறுசுறுப்பாக இருக்கக்கூடியவர். கடந்த ஆண்டு ஜூலை மாதம் நடந்த தேசியவாத கட்சியின் உட்கட்சிக்கூட்டத்தில் சில முடிவுகளை உமர் அப்துல்லா எடுத்துள்ளார்.

அதன்படி, ஜம்மு காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்யும் முடிவை மத்திய அரசு கைவிடாவிட்டால், மத்திய அரசுக்கு எதிராக மிகப்பெரிய ஆதரவைத் திரட்டவேண்டும் என பேசப்பட்டது.

மேலும், உமர் அப்துல்லா முன்னாள் வெளியுறவுத்துறை இணையமைச்சராக இருந்தவர், வர்த்தகம், தொழில்துறை அமைச்சராக இருந்தவர், முன்னாள் முதல்வர் என்பதால் இளைஞர்களைத் திரட்டுவதற்கான சாத்தியங்கள் இருப்பதாகக் காஷ்மீர் நிர்வாகம், போலீஸார் கருதினர்

மேலும் ஆகஸ்ட் 5-ம் தேதி காஷ்மீரில் சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டு, இன்டர்நெட்,தொலைபேசி, செல்போன் சேவைகள் பெரும்பாலும் முடக்கப்பட்டன.

அப்போது கடைசியாக உமர் அப்துல்லா டிவிட்டரில் வெளியிட்ட செய்தியில், " காஷ்மீர் மக்களே எதற்காக அடைத்து வைத்திருக்கிறார்கள் எனத் தெரியவில்லை. பாதுகாப்பாக இருங்கள், அமைதியாக இருங்கள்" எனத் தெரிவித்தார்.

இதுபோன்று உமர் அப்துல்லா வெளியிட்ட பல ட்விட்டர் செய்திகள் கொந்தளிப்பையும், இளைஞர்களைத் தூண்டும் விதத்தில் இருந்ததால், அவர் மீது பொதுப்பாதுகாப்புச் சட்டம் பாய்ந்ததாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

மேலும், உமர் அப்துல்லா குறித்து போலீஸார் சேகரித்த தகவல்களில் அனைத்து ட்விட்டர் பதிவுகளையும் காஷ்மர் நிர்வாகத்துக்குத் தாக்கல் செய்துள்ளனர்.

மக்கள் ஜனநாயகக் கட்சியின் தலைவர் மெகபூபா முப்தி, பாஜகவுடன் கூட்டணி வைத்து ஜம்மு காஷ்மீரில் முதல்வராக இருந்தார். இவரின் காலத்தில் பாதுகாப்பு படையினர் மீது தீவிரவாதிகள் தாக்குதல் நடத்துவது அதிகரித்துக் காணப்பட்டதும் இவர் மீது பிஎஸ்ஏ சட்டம் பாய ஒரு காரணமாகும்.

ஜம்மு காஷ்மீரில் உள்ள பிரிவினைவாத அமைப்புகளான ஜமாத் இ இஸ்லாமியாவுக்கு மெகபூபா முப்தி ஆதரவு தெரிவித்து வந்துள்ளார். இந்த அமைப்பு மத்திய அரசால் தடை செய்யப்பட்ட அமைப்பாகும். இதனால், பிரிவினைவாதிகளுக்கு ஆதரவு தெரிவித்தார் என்பதாலும் மெகபூபா மீது பிஎஸ்ஏ சட்டம் பாயக் காரணம் எனத் தெரிவிக்கப்படுகிறது

SCROLL FOR NEXT