ராமர் கோயில் அறக்கட்டளை உறுப்பினர்களில் நான் மட்டுமே தென்னிந்தியாவைச் சேர்ந்தவன் என பெஜாவர் மடாதிபதி விஷ்வபிரசன்ன தீர்த்த சுவாமி தெரிவித்துள்ளார்.
கர்நாடக மாநிலம் உடுப்பியில் உள்ள பெஜாவர் மடத்தின் மடாதிபதி விஷ்வபிரசன்ன தீர்த்த சுவாமி அயோத்தியில் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
உத்தரபிரதேச மாநிலம் அயோத்தியில் ராமர் கோயில் கட்டும் பணியை கண்காணிப்பதற்காக, ராம் ஜென்ம பூமி தீர்த் ஷேத்ரா அறக்கட்டளையை மத்திய அரசு நிறுவி உள்ளது. இந்த அறக்கட்டளையில் இடம்பெற்றுள்ள 15 உறுப்பினர்களில் நான் மட்டுமே தென்னிந்தியாவைச் சேர்ந்தவன். பெஜாவர் மடத்தின் முயற்சிதான் இதற்குக் காரணம்.
எனக்கு கிடைத்த இந்த அங்கீகாரத்தை எனது குரு மறைந்த விஷ்வேஷ தீர்த்த சுவாமிக்கு சமர்ப்பிக்கிறேன். ராமர் கோயில் அறக்கட்டளையின் உறுப்பினராக நியமித்தால் அதை ஏற்றுக்கொள்ளுமாறு என் குருதான் எனக்கு அறிவுரை வழங்கி இருந்தார். அதன் அடிப்படையில் இந்த பொறுப்பை ஏற்றுக் கொண்டேன்.
இந்தப் பணி மிகவும் பொறுப்பு மிக்கது. இந்த பொறுப்பை பகிர்ந்துகொள்ள அனைவரும் ஆதரவளிக்க வேண்டும். ராமர் கோயிலுக்கான திட்டம் பற்றி அடுத்த அறங்காவலர்கள் கூட்டத்தில் முடிவு செய்யப்படும். இந்தக் கூட்டம் அடுத்த 15 நாட்களுக்குள் நடைபெறும்.
ராமர் கோயில் மிகவும் அழகாக அமைய வேண்டும் என்பது என்னுடைய கனவு. இந்தக் கோயிலுக்கு வரும் பக்தர்களுக்கு தேவையான அனைத்து வசதிகளும் செய்து தரப்படும். அயோத்தியில் பெஜாவர் மடத்தின் கிளையை நிறுவவும் திட்டமிட்டுள்ளோம். இவ்வாறு அவர் தெரிவித்தார்.