அயோத்தியில் இருந்த பாபர் மசூதி இடிபாடுகளை தங்களிடம் ஒப்படைக்க வேண்டும் என முஸ்லிம்கள் கோருகின்றனர். இது தொடர்பாக, உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்ய திட்டமிட்டுள்ளனர்.
உத்திரபிரதேச மாநிலம் அயோத்தியில் இருந்த பாபர் மசூதி கடந்த 1992-ம் ஆண்டு டிசம்பர் 6-ம் தேதி இடிக்கப்பட்டது. அங்கு குவியலாக இருந்த மசூதி இடிபாடுகள் மீது கூடாரம் அமைத்து அதனுள் ராமர் சிலை வைத்து, தற்காலிகக் கோயில் செயல்பாட்டில் இருந்தது.
இதுதொடர்பான மேல்முறையீட்டு வழக்கில், கடந்த ஆண்டு நவம்பர் 9-ம் தேதி உச்ச நீதிமன்றம் இறுதித் தீர்ப்பு வழங்கியது. அதில் பாபர் மசூதி அமைந்திருந்த இடத்தில் ராமர் கோயில் கட்ட அனுமதி வழங்கியது. இதற்காக நீதிமன்ற உத்தரவின்படி அறக்கட்டளை நிறுவப்பட்டுள்ளது. இதையடுத்து, அந்த இடத்தில் ராமர் கோயில் கட்டும் பணி விரைவில் தொடங்க உள்ளது. இதற்காக, அப்பகுதியில் உள்ள இடிபாடுகள் அகற்றப்பட உள்ளன.
இதனிடையே, இந்த இடிபாடுகளை தங்களிடம் ஒப்படைக்க வேண்டும் என முஸ்லிம்களின் ஒரு பகுதியினர் கோரிக்கை வைத்துள்ளனர். இது தொடர்பாக, பாபர் மசூதி-ராமர் கோயில் மீதான வழக்குகளை நடத்த அமைக்கப்பட்ட பாபர் மசூதி நடவடிக்கை குழு (பிஏசி) உச்ச நீதிமன்றத்தில் ஒரு மனு தாக்கல் செய்ய தயாராகி வருகிறது.
இதுகுறித்து பிஏசியின் அமைப்பாளரும் அகில இந்திய முஸ்லிம் தனிச்சட்ட வாரியத்தின் செயலாளருமான வழக்கறிஞர் ஜாபர்யாப் ஜிலானி ‘இந்து தமிழ்’ நாளேட்டிடம் கூறும்போது, “எங்களது ஷரியா சட்டப்படி ஒரு மசூதியின் இடிபாடுகளை குப்பைகள் உள்ள அழுக்கான இடங்களில் வீசி எறியக் கூடாது. எனவே, நாங்கள் புனிதமாகக் கருதும் ஒவ்வொரு சிறிய இடிபாடுகளையும் ஒப்படைக்க உத்தரவிடக் கோரி உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்ய உள்ளோம். அனுமதி கிடைத்ததும், ஷரீயத் சட்டப்படி இடிபாடுகளை முறையாக அகற்றுவோம்” என்றார்.
இது தொடர்பாக, லக்னோவில் சில தினங்களுக்கு முன்பு நடந்த பிஏசி நிர்வாகக்குழு கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டது. இக்கூட்டத்தில், பாபர் மசூதியின் இடிபாடுகளை பத்திரப்படுத்தி வைக்க தங்களுக்கு அனுமதி வழங்க வேண்டும் என அயோத்தியின் 3 முக்கிய முஸ்லிம் குடும்பத்தினரும் கோரிக்கை வைத்துள்ளனர்.
மசூதிக்கான நிலத்துக்கு எதிர்ப்பு
புதிய மசூதி கட்டுவதற்காக அரசு 5 ஏக்கர் நிலத்தை ஒதுக்க வேண்டும் என உச்ச நீதிமன்றம் தனது தீர்ப்பில் கூறியிருந்தது. ஆனால், அகில இந்திய முஸ்லிம் தனிச்சட்ட வாரியம் உள்ளிட்ட பல்வேறு தரப்பினர் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். எனினும், புதிய மசூதி கட்டுவதற்காக அயோத்தி நகரில் இருந்து சுமார் 28 கி.மீ. தொலைவில் உள்ள தனிப்பூர் கிராமத்தில் அரசு 5 ஏக்கர் நிலம் ஒதுக்கி உள்ளது.
இந்த இடம் நகருக்கு வெளியே இருப்பதால் அயோத்திவாசிகள் தினமும் அங்கு சென்று தொழுகை நடத்துவது சிரமமாக இருக்கும் என முஸ்லிம்கள் கருதுகின்றனர். எனவே, உச்ச நீதிமன்ற உத்தரவின்படி அயோத்தி நகரில் நிலம் ஒதுக்கப்படவில்லை என நீதிமன்றத்தில் முறையிடப் போவதாக சில முஸ்லிம் அமைப்புகள் கூறி வருகின்றன.
இதனிடையே, மசூதிக்கான நிலத்தை பெறுவதற்கு தொடக்கம் முதல் ஆதரவாக இருந்து வரும் உத்தரபிரதேச சன்னி முஸ்லிம் மத்திய வக்ஃபு வாரியத்தினர், விரைவில் கூடி இதுகுறித்து இறுதி முடிவு எடுக்க உள்ளனர்.